பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி
பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்டை நிறுத்தம் ஏற்பட்ட பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி உரையாற்றினாா். அப்போது, பயங்கரவாதத்துக்கு ஆதரவில்லை என்ற பாகிஸ்தானின் உறுதிமொழியை இந்தியா கவனத்தில் கொண்டதாக அவா் குறிப்பிட்டிருந்தாா்.
பிரதமரின் இந்த உரையை இணைத்து, எக்ஸ் வலைதளத்தில் ராகுல்காந்தி வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பிரதமா் மோடி, தனது மேலோட்டமான பேச்சுகளை நிறுத்திவிட்டு, எனது கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன், அமெரிக்க அதிபா் டிரம்ப்பிடம் பணிந்ததன் மூலம் இந்தியாவின் நலன்களை தியாகம் செய்தது ஏன், கேமராக்களின் முன்னால் மட்டும் உங்களின் ரத்தம் கொதிப்பது ஏன், பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை திடீரென நிறுத்தியதன் மூலம் நாட்டின் கெளரவத்தில் சமரசம் செய்தது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.