நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அன்சுல் மிஸ்ரா ஐஏஎஸ்-க்கு ஒரு மாதம் சிறை
பாகிஸ்தான் நிராகரிப்பால் ஆலங்கட்டி மழையில் சேதமடைந்த விமானம்: திடுக்கிடும் தகவல்!
தில்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தின் விமானி, அசம்பாவிதத்தை தவிர்க்க பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதற்கு கேட்கப்பட்ட அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆழங்கட்டி மழையில் சிக்கிய இண்டிகோ விமானம் கடுமையாக குலுங்கிய நிலையில், அதன் முகப்பு பகுதி பலத்த சேதமடைந்தது.
தில்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி புதன்கிழமை மாலை இண்டிகோ நிறுவனத்தின் 6இ 2142 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டது.
இந்த விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது மோசமான வானிலை நிலவியுள்ளது. தொடர்ந்து ஸ்ரீநகரில் தரையிறக்குவதற்கு முன்னதாக ஆழங்கட்டி மழையில் சிக்கிய விமானம், கடுமையாக குலுங்கியதால் பயணிகள் அலறியுள்ளனர்.
மேலும், விமானத்தின் முகப்பு பக்கம் பலத்த சேதமடைந்த நிலையில், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
இந்த விமானத்தில் திரிணமூல் காங்கிரஸின் 5 நிர்வாகிகள் உள்பட 227 பயணிகள் பயணித்த நிலையில், அனைவரும் பாதுகாப்பாக விமானத்தைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
பாகிஸ்தான் நிராகரிப்பு
மோசமான வானிலையில் இண்டிகோ விமானம் சிக்கியது குறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதில், ”விபத்துக்குள்ளான இண்டிகோ விமானம் அமிர்தசரஸ் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது மோசமான வானிலையை கவனித்த விமானி, லாகூர் விமான கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொண்டு பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி கோரியுள்ளார்.
ஆனால், லாகூர் கட்டுப்பாட்டு மையம் அனுமதி மறுத்த நிலையில், தொடர்ந்து மோசமான வானிலையில் பறக்க வேண்டிய கட்டாயத்துக்கு விமானி தள்ளப்பட்டுள்ளார்.
இதனால், ஆழங்கட்டி மழையில் சிக்கிய விமானம் கடுமையாக குலுங்கியதால் முன்பகுதி சேதமடைந்துள்ளது. தொடர்ந்து, ஸ்ரீநகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு பதிலடியாக தனது வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்திருந்தது.
இந்த நிலையில், அவசர எச்சரிக்கை எழுப்பியும் இந்திய விமானத்துக்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.