பாகிஸ்தானுக்கு இனி அதிக நாள்கள் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு!
பாகிஸ்தான் 75 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டது, இனி அதிக நாள்கள் இல்லை என உத்தரப் பிரதேச முதல்வர் பேசியுள்ளார்.
அயோத்தியில் ஹனுமான் கதா மண்டபத்தை இன்று (மே 23) திறந்து வைத்தபின், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பயங்கரவாதம் பாகிஸ்தானை ஒருநாள் முழுவதுமாக அழித்துவிடும் எனக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நமது இந்திய ராணுவம் பாகிஸ்தானை, முதலில் தாக்கவில்லை, பாகிஸ்தான் முதலில் நமது அப்பாவி மக்களிடம் தங்களது மதத்தைக் கேட்டு சுட்டுக்கொன்றதாகக் கூறியதுடன், இந்திய வீரர்களின் பதிலடியில் 124 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:
”பாகிஸ்தான் நீண்டகாலமாக பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகின்றது. நான் உறுதியாகச் சொல்கிறேன், பயங்கரவாதம் பாகிஸ்தானை ஒருநாள் அழித்துவிடும். மேலும், பாகிஸ்தான் சுமார் 75 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டது. தற்போது, அவர்களது செயலுக்காக அந்நாடு தண்டனையை அனுபவிக்கும் காலம் வந்துவிட்டது. இன்று, இந்தியாவின் தைரியமான வீரர்கள் மிகுந்த பலத்துடன் பாகிஸ்தானுக்கு பதிலளித்து வருகின்றனர். நமது ராணுவ வீரர்களைப் பற்றி அனைத்து இந்தியர்களும் பெருமைக்கொள்ள வேண்டும்.” எனவும் அவர் பேசியுள்ளார்.
இத்துடன், பாகிஸ்தானுக்கு இன்னும் அதிக நாள்கள் இல்லை எனக் கூறிய அவர், நமது துறவிகளில் ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆன்மீக உலகில் இடமில்லை என அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டடப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் அரசுதான் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியதுடன், அங்குள்ள துறவிகள் அயோத்தியின் புகழை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்குத் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: புதிதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையாம்! ஒரு மழைக்கே இப்படியா?