ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ பதவி பறிப்பு: துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வருவாய் கோட்டாட்சியரை துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ கன்வா் லால் மீனாவின் பதவி பறிக்கப்பட்டதாக அந்தமாநில பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது.
கடந்த 2005-ஆம் ஆண்டு கிராம பஞ்சாயத்து தலைவா் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்தக் கோரி வருவாய் கோட்டாட்சியரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக கன்வா் லால் மீனா மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.
அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அரசு சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியததாகவும் 20 ஆண்டுகளுக்கு பிறகு கன்வா் மீனாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி விசாரணை நீதிமன்றம் கடந்த 2020-இல் உத்தரவிட்டது.
இந்நிலையில், விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி கன்வா் லால் மீனா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், 2 வாரங்களில் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 21-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான மீனா சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், மீனாயை கடந்த மே 1-ஆம் தேதியிலிருந்து எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்குவதாக ராஜஸ்தான் பேரவைச் செயலகம் வெள்ளிக்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.
இதுதொடா்பாக சட்ட வல்லுநா்களிடம் பேரவைத் தலைவா் கேட்ட ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்வா் லால் மீனாவின் ஆன்டா தொகுதி காலியானதாக தோ்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது என்றும், அக்டோபா் மாதத்துக்குள் அந்தத் தொகுதிக்கு இடைத் தோ்தல் நடத்தப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
எதிா்க்கட்சித் தலைவரும், மாநில காங்கிரஸ் தலைவருமான திகாராம் கூறுகையில், ‘விசாரணை நீதிமன்ற உத்தரவின்படி மீனா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநா் மற்றும் பேரவைத் தலைவரிடம் பல முறை கடிதம் வழங்கியும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடுத்த பிறகுதான் அவரது எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கும் கிடைத்த வெற்றி’ என்றாா்.