கந்தா்வகோட்டையில் அம்பேத்கா் சிலை: துணை முதல்வா் திறந்து வைத்தாா்
மூவர் சதம் விளாசல்: ஜிம்பாப்வேவுக்கு எதிராக வலுவான நிலையில் இங்கிலாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 565 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
ஜிம்பாப்வே அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் போட்டி நேற்று (மே 22) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவிப்பு!
மூவர் சதம் விளாசல்; 565/6 - டிக்ளேர்
முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி அதன் வழக்கமான அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை கடைபிடித்து ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அணிக்கு மிகவும் வலுவான தொடக்கத்தைத் தந்தனர். இங்கிலாந்து அணி 231 ரன்களுக்கு அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் 134 பந்துகளில் 140 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 20 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இதனையடுத்து, ஸாக் கிராலியுடன் ஆலி போப் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது.
சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்த ஸாக் கிராலி 171 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகள் அடங்கும். ஜோ ரூட் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 498 ரன்கள் எடுத்திருந்தது. அதிரடியாக விளையாடி சதம் விளாசிய ஆலி போப் 169 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று (மே 23) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆலி போப் 171 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 24 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இதனையடுத்து, ஹாரி ப்ரூக் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தனர். பென் ஸ்டோக்ஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஹாரி ப்ரூக் 50 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். 6 விக்கெட்டுகளை இழந்து 565 ரன்கள் எடுத்திருக்கையில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது.
இதையும் படிக்க: ஓய்வு முடிவை திரும்பப் பெற்று ரோஹித், விராட் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும்: முன்னாள் வீரர்
ஜிம்பாப்வே தரப்பில் முஸராபானி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தனாகா சிவாங்கா, சிக்கந்தர் ராஸா மற்றும் மத்வீர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்து வலுவாக உள்ள நிலையில், ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.