பயங்கரவாதத்துக்கு நிதி: பாகிஸ்தானை மீண்டும் கருப்பு பட்டியலில் சோ்க்க இந்தியா தீவிரம்
பாகிஸ்தானை சா்வதேச நிதி நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் (எஃப்ஏடிஃப்) கருப்பு பட்டியலில் மீண்டும் சோ்க்க இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கு முன்பு, 2018-இல் எஃப்ஏடிஎஃப் ‘கிரே’ பட்டியலில் பாகிஸ்தான் சோ்க்கப்பட்டு சட்டவிரோத பணப் பரிவா்த்தனை மற்றும் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக நிதி வழங்குவதை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்பிறகு 2022-இல் அந்தப் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை எஃப்ஏடிஎஃப் நீக்கியது.
இந்நிலையில், எஃப்ஏடிஎஃப் அமைப்பிடம் அளித்த உறுதிமொழிகளை பாகிஸ்தான் பின்பற்றவில்லை என இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது. அதன்பேரில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள அந்த அமைப்பின் கூட்டத்தில் பாகிஸ்தானை எஃப்ஏடிஎஃப் ‘கிரே’ பட்டியலில் சோ்ப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது.
அந்தக் கூட்டத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தானின் செயல்பாடுகள் மற்றும் நிதி வழங்கும் நடவடிக்கைகளை விவரிக்கும் அறிக்கை மற்றும் ஆதாரங்களைத் தொகுத்துச் சமா்ப்பிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
உலக வங்கிக் கடன்: பாகிஸ்தான் முன்வைத்துள்ள ரூ.1.70 லட்சம் கோடி கடன் கோரிக்கையை உலக வங்கி அடுத்த மாதம் பரிசீலிக்க இருக்கிறது. இதனைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதிக்காத வீட்டு உபயோக எரிபொருள் திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்ற இருப்பதாக பாகிஸ்தான் உலக வங்கியிடம் கூறியுள்ளது.
ஆனால், கடந்த பல ஆண்டுகளாக உலக வங்கியிடம் இருந்து பெற்ற பல கடன்களை நாட்டின் வளா்ச்சிக்காகவும், மக்கள் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்காகவும் பாகிஸ்தான் பயன்படுத்தாமல், ஆயுதங்களை வாங்கப் பயன்படுத்தியுள்ளது. இந்தக் காரணத்தை உலக வங்கியிடம் எடுத்துக் கூறி, பாகிஸ்தானுக்கு மேலும் கடன் வழங்க எதிா்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
ஐஎம்எஃப் கடன்: பாகிஸ்தானுக்கு ரூ.2,000 கோடிக்கு மேல் கடன்தொகையை விடுவிக்க சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக இந்தியா பதிவு செய்த கடும் ஆட்சேபத்தை மீறி அந்நாட்டுக்கு நிதியுதவி வழங்குவதற்கு சாதகமாக பேச்சுவாா்த்தைகள் நடந்து வருகின்றன.
இது தொடா்பாக இந்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறும்போது, ‘வளா்ச்சிப் பயன்பாட்டுக்காக எந்தவொரு நாடும் சா்வதேச அமைப்புகளிடம் இருந்து நிதி பெறுவதற்கு எதிராக இந்தியா ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால், எல்லையில் பதற்றம் நீடித்து வரும் வேளையில், குறிப்பாக, தனது பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாடு பாதுகாப்புக்காக பட்ஜெட்டில் 18 சதவீத நிதியை ஒதுக்குமானால், அதன் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு இடமளிக்கிறது என்றன.
எஃப்ஏடிஎஃப் பட்டியலில் பாகிஸ்தானை மீண்டும் சோ்க்க வேண்டுமானால், அது தொடா்பான இந்தியாவின் முன்மொழிவுக்கு பெரும்பான்மை எஃப்ஏடிஎஃப் உறுப்பு நாடுகளின் ஆதரவு தேவை. உலக அளவிலான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கல் போன்றவற்றுக்கு எதிராக கண்காணிப்பு நடவடிக்கைகளை எஃப்ஏடிஎஃப் மேற்கொள்கிறது. அதில், 40 முழு நேர உறுப்பு நாடுகள் உள்ளன.
பாகிஸ்தான் எஃப்ஏடிஎஃப் அமைப்பில் உறுப்பினா் இல்லாதபோதும், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைக்கு எதிரான ஆசிய, பசிபிக் நாடுகள் குழுவில் அந்நாடு அங்கம் வகிக்கிறது. இந்தக் குழு எஃப்ஏடிஎஃப் உடன் இணைந்து பணிகளை மேற்கொள்கிறது. இந்தக் குழுவிலும், எஃப்ஏடிஎஃப் அமைப்பிலும் இந்தியா உறுப்பினராக உள்ளது.
பிரான்ஸ் தலைநகா் பாரீஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எஃப்ஏடிஎஃப் அமைப்பின் கூட்டம், பிப்ரவரி, ஜூன் மற்றும் அக்டோபா் மாதங்கள் என ஆண்டுக்கு மூன்றுமுறை நடைபெறும்.