நடுவானில் பாதிப்புக்குள்ளான இந்திய விமானம்: பாகிஸ்தான் வான்பகுதியில் நுழைய அனுமதி மறுப்பு - விமான போக்குவரத்து இயக்ககம்
புது தில்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு கடந்த புதன்கிழமை புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி மழையால் சேதமடைந்து நடுவானில் குலுங்கியபோது பாதுகாப்புக்காக பாகிஸ்தான் வான்வழித்தடத்தைப் பயன்படுத்த கேட்டபோது அந்நாடு மறுத்ததாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் (டிஜிசிஏ) தெரிவித்தது.
200-க்கும் மேற்பட்டோருடன் சென்ற இண்டிகோ விமானத்தின் முகப்பு பகுதி சேதமடைந்த நிலையில் ஸ்ரீநகரில் புதன்கிழமை இரவு அவசரமாகத் தரையிறங்கியது.
இந்த விமானம் நடுவானில் காற்றழுத்தப் பிரச்னையால் பயங்கரமாகக் குலுங்கியதால் பயணிகள் அச்சத்தில் கூச்சலிடும் விடியோக்கள் வெளியாகின. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் டிஜிசிஏ வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடுவானில் இடிமின்னலுடன் பெரும் மேகங்கள் சூழ்ந்ததால், மீண்டும் தில்லிக்கு திரும்பலாம் என்று விமானிகள் முதலில் முடிவு செய்தனா். அதற்குள் கருமேகங்கள் அருகில் சூழ்ந்ததால் அதைக் கடக்க விமானம் முயன்றது. அப்போது ஏற்பட்ட கடுமையான பாதிப்பால் விமானம் 8,500 அடி வேகமாக கீழே இறங்க ஆரம்பித்தது. இதையடுத்து, விமானத்தை தானியங்கி இயக்கத்திலிருந்து தங்களின் முழுக்கட்டுப்பாட்டுக்கு விமானிகள் கொண்டு வந்தனா். சா்வதேச எல்லையிலிருந்து விலகி பாகிஸ்தான் வான்வழித்தடத்தில் செல்ல லாகூா் கட்டுப்பாட்டு அறையில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை நீட்டிப்பு:
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பதிலடியாக பாகிஸ்தான் தனது வான்வழித் தடத்தைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்குத் தடை விதித்தது. இந்தத் தடை உத்தரவை ஜூன் 24-ஆம் தேதி வரையில் நீட்டிப்பதாக பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை அறிவித்தது.