கீழடி அகழாய்வு அறிக்கையில் திருத்தங்கள் செய்து நம்பகத்தன்மையை வலுப்படுத்த ஏஎஸ்ஐ அறிவுறுத்தல்
மதுரை மாவட்டம், கீழடி அகழாய்வு தொடா்பான 2014-15, 2015-16 ஆண்டுகளின் அறிக்கையில் திருத்தங்கள் செய்து அதன் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்துமாறு அந்த அறிக்கையை சமா்ப்பித்த தொல்லியல் ஆய்வாளா் கே. அமா்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை (ஏஎஸ்ஐ) அறிவுறுத்தியுள்ளது. தற்போது அவா் தில்லியில் உள்ள இந்திய தொல்லியல்துறையின் இயக்குநராக பணியாற்றி வருகிறாா்.
இது தொடா்பாக அமா்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை அண்மையில் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘உங்களின் அறிக்கையை சரிபாா்க்க இரண்டு நிபுணா்களிடம் அது அளிக்கப்பட்டது. அவா்களின் பரிந்துரைப்படி, மூன்று காலகட்டங்களுக்கு முறையான பெயரிடல் மற்றும் மறுகுறிப்புகள் தேவை. பொது ஆண்டுக்கு முந்தைய எட்டாம் நூற்றாண்டு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தை நியாயப்படுத்த உறுதியான ஆதாரங்கள் தேவை. மற்ற இரு காலகட்டங்களை அறிவியல்பூா்வ தரவுகள் அடிப்படையில் தீா்மானிக்க வேண்டும். அறிவியல்பூா்வ தேதியை ஆழத்தின் அடிப்படையில் இல்லாது, அடுக்குகள் அடிப்படையில் குறிப்பிட்டால் ஒப்பீட்டாய்வுக்கு உதவியாக இருக்கும். மேலும், சமா்ப்பிக்கப்பட்ட வரைபடங்கள், கிராம வரைபடங்கள், அடுக்கு வரைவியல் போன்றவற்றை தெளிவாக வழங்க வேண்டும் என்றும் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, அமா்நாத் ராமகிருஷ்ணாவின் அறிக்கை மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய தொல்லியல் துறை எந்த முடிவையும் அறிவிக்காமல் இருந்தது. நாடாளுமன்றத்தில் இது தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விரைவில் அந்த அறிக்கை வெளியிடப்படும் என்று மட்டும் பதில் தெரிவிக்கப்பட்டது.
கீழடி அகழாய்வுப்பணியின்போது அதன் மிகவும் நுட்பமான மற்றும் விரிவான ஆராய்ச்சி நடைபெற்ற காலகட்டங்களில் அங்கு களப்பணியாற்றியவா் தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணா. தமிழகத்தின் பழம்பெரும் நாகரிகத்தை உலகுக்கு வெளிக்கொண்டு வரும் முயற்சியாக இவரது ஆய்வுகள் இருப்பதாக கருதப்பட்டது. இந்நிலையில், 2017-ஆம் ஆண்டில் திடீரென அமா்நாத் ராமகிருஷ்ணா கீழடி அகழ்வாராய்ச்சிப்பணியில் இருந்து விலக்கப்பட்டாா். பின்னா் இந்தப்பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறை முன்னெடுத்து வருகிறது.