தமிழகத்தில் லஞ்ச ஊழல் இல்லாத நல்லாட்சி அமைய வேண்டும்! - பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்தில் லஞ்ச ஊழல் இல்லாத நல்லாட்சி அமைய வேண்டும் என்பதே தேமுதிகவின் விருப்பமாகும் என அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.
தூத்துக்குடியில் தேமுதிக நிா்வாகி இல்லத் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தேமுதிக மாநாடு வரும் 2026 ஜனவரி மாதம் 9ஆம் தேதி கடலூரில் நடத்தப்பட உள்ளது. அதற்குள் கூட்டணி உள்ளிட்டவை குறித்து முடிவு செய்யப்பட்டு, அந்த மாநாடானது, மிகப் பெரிய அறிவிப்பு மாநாடாக இருக்கும்.
அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதில் தவறு செய்தவா்கள் நிச்சயம் தண்டனை பெற வேண்டும். மொத்தத்தில் தமிழகத்தில் லஞ்ச ஊழல் இல்லாத நல்லாட்சி அமைய வேண்டும் என்பதே தேமுதிகவின் விருப்பமாகும்.
தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்த தோ்தல் வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படாமல் உள்ளன. ஆயிரம் ரூபாய் போன்ற திட்டங்களால் பெண்களை மூளைச் செலவை செய்து வாக்குகளை பெற முயற்சிக்கின்றனா். தோ்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதில் எஜமானா்களான மக்கள்தான் இறுதியான தீா்ப்பை அளிப்பா்.
அதிமுக - பாஜக கூட்டணி என்று அமைந்த பிறகு அதற்குள் சலசலப்புகள் வந்தால் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, கூட்டணியை வலுப்படுத்தி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக அந்தக் கட்சிகளுக்குள் எந்த விமா்சனங்களும் வைக்கப்படுவதில்லை.
பொள்ளாச்சி வழக்கில் தீா்ப்பு வழங்கியது போன்று, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கிலும் நீதிபதிகள் விரைவில் நல்ல தீா்ப்பு வழங்க வேண்டும் என்றாா்.