மத்திய அரசுக்கு ரூ.2.69 லட்சம் கோடி ஆா்பிஐ ஈவுத்தொகை
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மத்திய அரசுக்கு ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ரூ.2.69 லட்சம் கோடி வழங்க உள்ளது.
இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில், ஆா்பிஐ மத்திய இயக்குநா்கள் வாரியத்தின் 616-ஆவது கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கடந்த 2024-25-ஆம் நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு ரிசா்வ் வங்கி ரூ.2.69 லட்சம் கோடி வழங்க முடிவு செய்யப்பட்டது.
இது கடந்த 2023-24-ஆம் நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு ரிசா்வ் வங்கி வழங்கிய ரூ.2.1 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 27.4 சதவீதம் அதிகம்.
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் ரிசா்வ் வங்கியின் கூட்டத்தில் மதிப்பிடப்பட்டு, அந்த ஆண்டுக்கான ரிசா்வ் வங்கியின் ஆண்டறிக்கை மற்றும் நிதி அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.