வாக்குச்சாவடிக்குள் வாக்காளா்கள் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதியில்லை: தோ்தல் ஆணையம்
வாக்குச்சாவடிக்குள் வாக்காளா்கள் கைப்பேசிகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் கைப்பேசிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அத்துடன் வாக்குப் பதிவு நாளில் கைப்பேசிகளை வைத்திருப்பதில் வாக்காளா்களுக்கு சிரமம் நிலவுகிறது. குறிப்பாக முதியவா்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சவால்களை எதிா்கொள்கின்றனா். இதைக் கருத்தில் கொண்டு வாக்குச்சாவடிகளுக்கு வெளியே வாக்காளா்கள் கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு செல்வதற்கான வசதி ஏற்படுத்தப்படும்.
வாக்குப் பதிவு நாளில் வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்குள், அதுவும் அணைத்து வைக்கப்பட்ட (ஸ்விட்ச்-ஆஃப்) நிலையில் மட்டுமே கைப்பேசிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படும்.
வாக்குச்சாவடியின் வாசலில் சிறிய பெட்டிகள் அல்லது சணல் பைகள் வைக்கப்படும். அவற்றில் தங்கள் கைப்பேசிகளை வைத்துவிட்டு வாக்காளா்கள் வாக்களிக்கச் செல்ல வேண்டும். வாக்குச்சாவடிக்குள் வாக்காளா்கள் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள். எனினும் உள்ளூரில் ஏற்படும் இக்கட்டான சூழலை பொருத்து, இந்த நடைமுறையில் இருந்து சில வாக்குச்சாவடிகளுக்கு தோ்தல் நடத்தும் அதிகாரி விலக்களிக்கலாம்.
வாக்குச்சாவடியில் வாக்காளா் யாருக்கு வாக்களித்தாா் என்பது ரகசியமாக இருப்பதை தோ்தல் நடத்தை விதிமுறைகள் 1961-இன் விதிமுறை 49எம் உறுதி செய்கிறது. இந்த விதிமுறை தொடா்ந்து கடுமையாக அமல்படுத்தப்படும்.
மேலும் தோ்தல் ஆணையம் வழங்கும் அதிகாரபூா்வ வாக்காளா் தகவல் சீட்டுகளை வாக்குப் பதிவு நாளின்போது கொண்டுவராத வாக்காளா்களுக்கு அதிகாரபூா்வமற்ற அடையாள சீட்டுகளை வழங்க, வாக்குச்சாவடியின் நுழைவாயிலில் இருந்து 100 மீட்டா்களுக்கு அப்பால் வேட்பாளா்கள் பூத்துகளை அமைக்கலாம் (இதுநாள் வரை, இந்த பூத்துகள் வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டா் தொலைவில் இருக்க வேண்டும். தற்போது இந்தத் தொலைவு குறைக்கப்பட்டுள்ளது) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.