தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் சென்றுள்ளாா்: தமிழிசை
நாளை கோவை, நீலகிரிக்கு அதிகனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (மே 25, 26) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை எதிா்பாா்த்ததைப்போல கேரளத்தில் மே 25-ஆம் தேதி தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. தொடா்ந்து தமிழகத்தில், மேற்கு தெடா்ச்சி மழை மாவட்டங்களிலும் பரவலாக மழைபெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் சனிக்கிழமை (மே 24) முதல் மே 27-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.
ஆரஞ்ச், சிவப்பு எச்சரிக்கை: குறிப்பாக, சனிக்கிழமை (மே 24) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும், மே 25, 26-ஆம் தேதிகளில் திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மே 25, 26 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு (210 மி.மீ.க்கும் அதிகமாக) வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயா்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக, மதுரை விமான நிலையத்தில் 102.92 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிவை பதிவானது. பரமத்திவேலூா் - 101.5, மதுரை நகரம், சென்னை மீனம்பாக்கம் - தலா 100.76, திருச்சி - 100.58, தூத்துக்குடி - 100.4 டிகிரி என மொத்தம் 6 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை படிப்படியாக குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.