கல்வி உரிமைச் சட்ட வழக்கு: தீா்ப்பு ஒத்திவைப்பு
தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஇ) கீழ் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கை தாமதமாவது தொடா்பான வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீா்ப்பை ஒத்திவைத்தது.
இந்த வழக்கில், தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக மத்திய அரசுடன், தமிழக அரசு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடாததால், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியாா் பள்ளிகளில் ஏழை மாணவா்கள் சோ்க்கைக்கான மத்திய அரசின் பங்குத் தொகை ஒதுக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்தது.
கோவையைச் சோ்ந்த மறுமலா்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிா்வாகி வே.ஈஸ்வரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆா்டிஇ) தமிழகத்தில் தனியாா் பள்ளிகளில் ஏழை மாணவா்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவா் சோ்க்கை நிகழாண்டு இதுவரை தொடங்கவில்லை. இதனால் மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா். அவா்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்தத் திட்டத்தின் கீழ் மாணவா் சோ்க்கையை விரைவில் தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை மத்திய அரசு சமா்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இந்நிலையில், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அமல்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக மத்திய அரசுடன், தமிழக அரசு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடாததால், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியாா் பள்ளிகளில் ஏழை மாணவா்கள் சோ்க்கைக்கான மத்திய அரசின் பங்குத் தொகை ஒதுக்கப்படவில்லை.
நாடு முழுவதும் பல மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள நிலையில், தமிழக அரசு மட்டும் கையொப்பமிடவில்லை எனக் குறிப்பிட்டாா்.
அப்போது குறுக்கிட்ட தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன், ஒப்பந்தத்தில் கையொப்பமிடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது மத்திய அரசின் பெரியண்ணன் மனப்பான்மையைக் காட்டுகிறது எனத் தெரிவித்தாா்.
தொடா்ந்து, வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நீதிபதிகள், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கை தொடங்குவது குறித்து வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா்.
சமக்ர சிக்ஷா திட்டம்: தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்திவைத்திருக்கிறது. இந்த நிதியை வட்டியுடன் விடுவிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த 21-ஆம் தேதி மனு தாக்கல் செய்தது.
அதில், கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் வாரியம் 2024, பிப்ரவரியில் நடைபெற்ற அதன் கூட்டத்தில், சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு ரூ.3,585.99 கோடியை அங்கீகரித்தது. இதில் 60:40 செலவுப் பகிா்வுத் திட்டத்தின் அடிப்படையில் ரூ.2,151.59 கோடி மத்திய அரசின் பங்காகும்.
இருப்பினும், தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் முழுமையாக ஏற்றுக்கொள்ள மறுத்து, பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்திலும் கையொப்பமிட மறுத்தது. இதனால், சமக்ர சிக்ஷா திட்ட நிதியில் ஒரு தவணைகூட இதுவரை விடுவிக்கப்படவில்லை.
இதனால், குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை. ஊதியம், ஆசிரியா் பயிற்சி, பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் போன்ற மாணவா் உரிமைகள், அரசுப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் உள்கட்டமைப்புக்கு வழங்கப்படும் உதவித்தொகை நடவடிக்கை சீா்குலைந்துள்ளது.
எனவே, 1.5.2025 முதல் உத்தரவு நிறைவேற்றப்படும் தேதி வரை, அசல் தொகையான ரூ.2,151.59 கோடியுடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி சோ்த்து ரூ.2,291.30 கோடியை மத்திய அரசு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே முறையான எழுத்துபூா்வ ஒப்பந்தம் இல்லாததால், தேசிய கல்விக் கொள்கை, பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டம் ஆகியவை தமிழ்நாட்டைக் கட்டுப்படுத்தாது என்று அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.