ரஷியா - உக்ரைன் இடையே மிகப் பெரியளவில் போர்க் கைதிகள் பரிமாற்றம்!
``அம்மா நான் திருடல" - உயிரைப் பறித்த 3 சிப்ஸ் பாக்கெட்; குமுறும் பெற்றோர் - என்ன நடந்தது?
மேற்குவங்க மாநிலம் கிழக்கு மிட்னாபூரின் பன்சுரா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணேந்து தாஸ். 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவனான இவர் மீது, கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், கோசைன்பர் சந்தையில் இருக்கும் ஒரு திண்பண்ட கடையில் சிப்ஸ் பாக்கெட் திருடியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக உள்ளூர் வாசிகள் கூறியதாவது, ``கடைக்கு அருகில் இருந்த சிலர், கடைக்காரரான சுபாங்கர் தீட்சித் கடையில் இல்லாத நேரத்தில், சிறுவன் ஒருவர் கடையிலிருந்து சிப்ஸ் பாக்கெட்களை திருடிச் செல்வதாக தெரிவித்திருக்கின்றனர்.
அதனால் அந்த சிறுவனைக் கண்டுபிடிக்க, சிறுவன் சென்ற வழியில் கடைக்காரரான சுபாங்கர் தீட்சித் சென்று சிறுவனை சிப்ஸ் பாக்கெட்டுடன் பிடித்திருக்கிறார். அப்போது அந்த சிறுவன், 'என்னிடம் ரூ.20 இருக்கிறது. மூன்று சிப்ஸ் பாக்கெட்களுக்கு 15ரூ போக மீதி பணம் வேண்டும்' எனக் கேட்டிருக்கிறார். மீதிப்பணம் கொடுப்பதாக கடைக்காரர் சிறுவனை கடைக்கு அழைத்துச் சென்று, பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்.
இதைப் பெற்றோரிடம் சிறுவன் கூறியபோது, சிறுவனின் தாயாரும் சிறுவனை கடைக்கு அழைத்துச்சென்று விசாரித்து சிறுவனையே திட்டியிருக்கிறார். இது நடந்து முடிந்த பிறகு வீட்டுக்குச் சென்ற சிறுவன் பூச்சிக் கொல்லி மருந்தை உட்கொண்டிருக்கிறான்.
இதை அறிந்த பெற்றோர், சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். இந்த நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்." எனக் குறிப்பிட்டனர்.

சிறுவனின் மரணத்துக்குப் பிறகு அவர் எழுதிய தற்கொலைக் குறிப்பு கிடைத்தது. அதில், ``அம்மா நான் திருடவில்லை" என எழுதி வைத்திருக்கிறார். 'கடைக்கு சிப்ஸ் வாங்கச் சென்ற சிறுவன், கடையில் ஆள் இல்லை என்றதும் சிப்ஸ் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு, பிறகு பணம் கொடுக்கலாம் என நினைத்திருக்கலாம். அதைப் புரிந்துகொள்ளதாவர்கள், தவறாக நினைத்துப் பேசியிருக்கிறார்கள். அதிகாரப்பூர்வ புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்திருக்கிறோம்' எனக் காவல்துறை தெரிவித்திருக்கிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அதிகாரிகள் சிறுவனின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் தமிழக சுகாதார சேவை மையத்தின் 104 எண்ணிற்குத் தொடர்பு கொண்டு பேசலாம்.