விதிகளை பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி கடன்: ஐஎம்எஃப்
43 ஆண்டுகள் கழித்து 104 வயதில் விடுதலையான ஆயுள் தண்டனைக் கைதி!
உத்தரப் பிரதேசத்தில் ஆயுள் தண்டனைப் பெற்ற கைதி ஒருவர் 43 ஆண்டுகள் கழித்து, தனது 104 வயதில் சிறையிலிருந்து விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.
கௌஷம்பி மாவட்டத்தின் கௌராயி கிராமத்தைச் சேர்ந்தவர் லங்கன் (வயது 104), இவர் கடந்த 1921 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதியன்று பிறந்ததாக அவரது ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதியன்று, இரண்டு தரப்புக்கு இடையில் உண்டான மோதலில் பிரபு சரோஜ் என்பவர் கொல்லப்பட்டார். அந்தக் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று லங்கன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 3 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அதையடுத்து, இந்த வழக்கில் கடந்த 1982-ம் ஆண்டு அவர்கள் நால்வருக்கும் பிரக்யராஜ் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து, சிறையில் அடைத்தது.
இந்நிலையில், அந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர்கள் நால்வரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நடைபெற்ற வந்த காலத்திலேயே அவர்களில் மூன்று பேர் காலமாகியுள்ளனர்.
இதையடுத்து, இந்த வழக்கிலிருந்து கடந்த மே 2 ஆம் தேதியன்று, லங்கனை அலகாபாத் நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது. இதனால், கடந்த மே 20 ஆம் தேதியன்று லங்கன் கௌஷம்பி மாவட்ட சிறையிலிருந்து சுமார் 43 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (மே 23) தெரிவித்துள்ளனர்.
104 வயதில் முதியவராக விடுதலைச் செய்யப்பட்டுள்ள அவர் அம்மாவட்டத்தின் ஷரைரா பகுதியில் வசிக்கும் அவரது மகளிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: பாகிஸ்தானுக்கு இனி அதிக நாள்கள் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு!