திருவள்ளூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு
பாஜக அரசின் 100 நாள் சாதனைகள் குறித்த அறிக்கையை வெளியிட திட்டம்
பாஜக அரசு, தில்லியில் தனது 100 நாள் ஆட்சிக் கால சாதனைகள் குறித்த அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
இது தொடா்பாக அரசு வட்டாரங்கள் கூறியதாவது: தில்லியில் தனது அரசின் 100 நாள்கள் குறித்த அறிக்கையை முதல்வா் இந்த நிகழ்வில் வழங்குவாா். இந்த நிகழ்வு மே 31-ஆம் தேதி நடைபெறும். இந்த நிகழ்வின் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இந்த நிகழ்வில் அரசு சில புதிய முயற்சிகளையும் அறிவிக்கக்கூடும். மே 31-ஆம் தேதி 10 மாவட்டங்களில் 33 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் சுகாதார மருத்துவமனைகளை முதல்வா் குப்தா திறந்து வைப்பாா். சுற்றுச்சூழல் துறை கடந்த 100 நாள்களில் அதன் பல்வேறு சாதனைகள் மற்றும் முயற்சிகளை எடுத்துக்காட்டும். தில்லியில் காற்று மற்றும் யமுனை நீரின் தரத்தை மேம்படுத்த ஒரு மெகா மாசுபாடு செயல் திட்டத்தைத் தொடங்கும்.
தில்லி அரசின் நிதித்துறை, அதன் சாதனைகளில், முந்தைய ஆம் ஆத்மி அரசின் செயல்திறன் குறித்த நிலுவையில் உள்ள சிஏஜி அறிக்கைகளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. மேலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், 1,800 மாணவா்களின் நிலுவையில் உள்ள ரூ.19 கோடி உதவித்தொகையை வெளியிட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
தில்லியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக அரசு அமைத்தது. பிப்ரவரி 20-ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்ட பிரமாண்டமான விழாவில் ரேகா குப்தா தனது அமைச்சரவை சகாக்களுடன் முதல்வராக பதவியேற்றாா்.
ரேகா குப்தா அரசு தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், தில்லியில் ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. பின்னா், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவா்களுக்கு ரூ.10 லட்சம் சுகாதார காப்பீட்டிற்காக ‘வே வந்தனா’ திட்டத்தின் கீழ் பதிவு செய்வதையும் அறிவித்தது.
மாா்ச் மாதம் சட்டமன்றத்தில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வா், பாஜகவின் தோ்தல் வாக்குறுதியின் கீழ் தில்லியில் தகுதியுள்ள பெண்களுக்கு ரூ.2,500 மாதாந்திர கொடுப்பனவுக்காக ரூ.5,100 கோடியை ஒதுக்கினாா்.
பாஜக அரசு 2025-26 ஆம் ஆண்டிற்கான ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள தில்லியின் இதுவரை இல்லாத மிகப்பெரிய பட்ஜெட்டையும் தாக்கல் செய்தது.
ஏப்ரல் 29-ஆம் தேதி தில்லி அமைச்சரவை தில்லியில் உள்ள தனியாா் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணம் தொடா்பான முறைகேடுகளைத் தடுக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா இன்னும் தில்லி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவில்லை.
நகரின் பல்வேறு பகுதிகளில் இணைப்பை மேம்படுத்துவதற்காக அரசின் போக்குவரத்துத் துறை கடந்த மாதம் 400 சிறிய அளவிலான பேருந்துகளை அறிமுகப்படுத்தியது. குடிசைப் பகுதிகள் மற்றும் குழாய் இணைப்புகள் இல்லாத அங்கீகரிக்கப்படாத காலனிகள் போன்ற பகுதிகளில் நீா் விநியோகத்தை அதிகரிக்க 1,111 ஜிபிஎஸ் வசதி கொண்ட டேங்கா்களை ரேகா குப்தா கடந்த மாதம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற தோ்தலில், தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் 10 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 தொகுதிகளை பாஜக வென்று ஆட்சிக்கு வந்தது.