விதிகளை பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி கடன்: ஐஎம்எஃப்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களுக்கு 25% வரி? டிரம்ப் அதிரடி!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை அமெரிக்காவில் விற்கக் கூடாதென அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவிலோ வேறு நாடுகளிலோ தயாரிக்கப்படும் ஐபோன்கள், அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுவதை விரும்பவில்லை என்று டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவையாகத்தான் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் (ஏப்ரல் - ஜூன் வரையில்) தயாரிக்கப்பட்டவையே என ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் மே 2ஆம் தேதி அறிக்கை மூலம் அறிவித்தார். டிம் இவ்வாறு அறிவித்த சில நாள்களிலேயே, இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்தார்.
கத்தார் தலைநகர் தோஹாவில், மே 15 ஆம் தேதியில் நடைபெற்ற வணிக மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், அமெரிக்க பொருள்களுக்கான வரியை நீக்க இந்தியா ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசியதாவது, ''இந்தியா மிக அதிக அளவில் இறக்குமதி வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று. இருப்பினும், இந்தியா எங்களுக்கு ஒரு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளனர். அதில், எங்கள் பொருள்களுக்கு எந்த வரியையும் விதிக்கப்போவதில்லை என்ற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
நான் டிம்மிடம் கூறினேன், நாங்கள் உங்களை நன்முறையில் நடத்துகிறோம். ஆனால், இந்தியாவில் நீங்கள் ஆலைகளை எழுப்புவதை நாங்கள் விரும்பவில்லை'' என டிம்மிடம் கூறியதாக டிரம்ப் குறிப்பிட்டார். இருப்பினும், டிரம்ப்பின் வலியுறுத்தலை டிம் குக் கண்டுகொண்டதுபோலத் தெரியவில்லை.