பொள்ளாச்சி: மாயமான ஆட்டிசம் பாதித்த இளைஞர் கொலையா? சித்திரவதை செய்ததா காப்பகம்? அதிர்ச்சி தகவல்
கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் ‘யுதிரா சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற பெயரில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு காப்பகம் செயல்பட்டு வருகிறது. கவிதா, ஷாஜி, கிரி ஆகியோர் அதன் உரிமையாளர்களாக உள்ளனர். அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் ஆட்டிசம் உள்ள 23 பேர் உள்ளனர்.

இந்நிலையில் கரவளி மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகன் வருண் காந்த் (வயது 24) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டுள்ளார். இதனிடையே கடந்த மே மாதம் 15-ம் தேதி வருண் காணாமல் போனதாக குடும்பத்தினருக்கு தகவல் சென்றுள்ளது.
காப்பகத்தில் உள்ள சிறுவர்களை ஆழியாறு அணைக்கு சுற்றுலா அழைத்துச் சென்றபோது, வருண் மாயமானதாக காப்பக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆழியாறு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டிருந்தது. வருணின் குடும்பத்தினர் அவரை பல்வேறு பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை. மாறாக அதிர்ச்சி தகவல்கள் தான் பெற்றோருக்கு கிடைத்திருக்கிறது.

வருண் 15-ம் தேதிக்கு முன்பிருந்தே காணவில்லை. காப்பக நிர்வாகிகள் வருணை அடித்து சித்ரவதை செய்து, அவர் படுத்திருந்த படுக்கை மற்றும் கட்டில் ஆகியவற்றை வேறு அறைக்கு மாற்றியதாக காப்பகத்தின் ஊழியர்கள் மூலம் தகவல் கிடைத்திருக்கிறது.
இதேபோல அங்குள்ள பலரும் அடித்து சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவது தெரியவந்துள்ளது. அப்படித்தான் வருணையும் தாக்கி அவரின் உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வருணின் அப்பா ரவிக்குமார் மகாலிங்கபுரம் காவல்நிலையம், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகாரளித்தார்.

அதில், “காப்பக நிர்வாகிகள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்கிறார்கள். கடந்த 3 நாள்களாக காப்பக நிர்வாகிகளின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அங்கு சிசிடிவி காட்சிகளும் இல்லை. எங்கள் மகனை காப்பக நிர்வாகிகள் சித்ரவதைப்படுத்தி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.” என்று கூறினர்.
இந்நிலையில், "வருண் கொலை செய்யப்பட்டு உடலை கேரளாவில் புதைத்துவிட்டனர். அதனால் தான் காப்பக நிர்வாகிகள் மாயமாகினர்" என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, “குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகளின் உதவியுடன் காப்பகத்தில் உள்ள மற்ற 22 குழந்தைகளை காப்பக நிர்வாகிகளின் வீட்டில் இருந்து மீட்டுள்ளோம்.

காப்பக நிர்வாகிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களை பிடித்தால் தான் வருணின் நிலை குறித்து தெரிய வரும். அந்த காப்பகம் சுமார் 9 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. ஏதோ தவறு இருப்பதால் தான் தலைமறைவாகியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.” என்றனர்.