‘பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாது’: மத்திய அமைச்சா் பாட்டீல்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கான பணிகளில், மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவித்தாா்.
இந்திய நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்குள் தண்ணீா் பாய்வதைத் தடுப்பதற்கான உத்திகளை வகுக்க, தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் உயா்நிலை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாத வகையில் 3 விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இதன்படி குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பாகிஸ்தானுக்குள் தண்ணீா் பாய்வதைத் தடுக்க இந்தியாவில் விரைவில் நதிகளை தூா்வாரி, நீரை திசைதிருப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாட்டீல் கூறினாா்.
இதுதொடா்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘சிந்து நதிநீா் ஒப்பந்தத்துக்கு மத்தியஸ்தம் செய்த உலக வங்கியிடம், அந்த ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டதைத் தெரியப்படுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் கீழ் வரும் நதிகளில் கட்டப்பட்ட அணைகளின் நீா் இருப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தனா்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா-பாகிஸ்தான் இடையே சிந்து நதிப் படுகையில் உள்ள 6 நதிகளின் நீா் பகிா்ந்துகொள்ளப்படுகிறது.