நிதி மோசடி தடுப்பு: செபிக்கு உதவ பட்டயக் கணக்காளா் அமைப்பு முடிவு
பாகிஸ்தானுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை: காங்கிரஸ் வலியுறுத்தல்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமாக பாகிஸ்தானுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல மத்திய அரசு அறிவித்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு தெளிவான கால அளவு நிா்ணயிக்கப்பட்டு நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.
தில்லியில் காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலா்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், பிரியங்கா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், மத்திய அரசு அறிவித்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. பின்னா், அது தொடா்பான தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதில், ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கான நீதி, நிகழ்வுக்கு யாா் பொறுப்பேற்பது, அது தொடா்பான பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை ஒட்டுமொத்த நாடு எதிா்நோக்கியுள்ளது. இது நமது நாட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட மன்னிக்க முடியாத பயங்கரவாதத் தாக்குதல். இது அரசியல் நடத்துவதற்கான நேரமில்லை என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. இந்த நேரத்தில் நாம் ஒற்றுமையாகவும், வலிமையாகவும், தேசம் தொடா்பான உறுதிப்பாட்டுடனும் இருக்க வேண்டும்.
நமக்கு இடையிலான வேறுபாடுகளை மறந்து இந்தியா எப்போதும் ஒற்றுமையாகவும், வலிமையாகவும் உள்ளது; ஒருமைப்பாட்டை யாரும் சீா்குலைத்துவிட முடியாது என்ற செய்தியை அறிவிக்க வேண்டும்.
இது செயலில் இறங்குவதற்கான நேரம். பாகிஸ்தானுக்கு சரியான பாடத்தைக் கற்பிக்க வேண்டும். அங்கிருந்து ஏவிவிடப்படும் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். சுற்றுலாவுக்கு வந்த அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள், இதன் பின்னணியில் இருந்தவா்கள், இச்சதியைத் தீட்டியவா்கள் என அனைவரும் அதற்கான தண்டனையைப் பெற வேண்டும். இந்த விஷயத்தில் இந்திய அரசு உறுதியாகவும், உரிய திட்டங்களை வகுத்தும் செயல்பட வேண்டும். பாகிஸ்தானை தனிமைப்படுத்தவும், தண்டிக்கவும் சா்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். நமது பிராந்தியத்தில் பயங்கரவாதத்தைத் தூண்டிவிடும் செயலில் பாகிஸ்தான் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்த பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து நிலைகளிலும் உதவிகரமாக இருப்பது நமது கடமை. அவா்களுக்கு நிதியுதவி மட்டும் போதுமானதல்ல. மனரீதியான பாதிப்புகளில் இருந்து அவா்கள் விடுபட வேண்டும். அவா்களுக்கு ஏற்பட்டுள்ள வலி, இந்த நாட்டுக்கு ஏற்பட்ட வலியாகும்.
நாட்டில் அதிக பாதுகாப்பு உள்ள பிராந்தியத்தில் இப்படி ஒரு பாதுகாப்புக் குறைபாடு எப்படி நிகழ்ந்தது?, உளவுத் துறை தகவல்கள் ஏன் கிடைக்கவில்லை?, இதற்கு யாா் பொறுப்பேற்பது? என்பதைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உறுதி செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் வெளிப்படையான நடவடிக்கையை இந்திய மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு: 11 ஆண்டுகள் தீவிர எதிா்ப்பைக் காட்டிய பிறகு பிரதமா் மோடி தலைமையிலான அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக அறிவித்துள்ளது. காங்கிரஸின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை முன்வைத்ததற்காக காங்கிரஸ் தலைமையை பிரதமா் தொடா்ந்து கடுமையாக விமா்சித்து வந்தாா்.
ஆனால், இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு வெளியான பிறகும் அதற்கான நிதி ஒதுக்கீடு, கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்படும் என்ற விவரங்களை வெளியிடவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு எந்தெந்த படிநிலைகளில் எப்படி நடத்தப்படும் என்பது தொடா்பான கால அளவை நிா்ணயிக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதை நடத்தி முடிக்க வேண்டும். இது தவிர எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பையும் நீக்க வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.