தங்க நகைக் கடன் : ரூ.50,000 தங்கத்தை அடகு வைத்தால் ரூ.35,500 கடன் - RBI புது ரூல...
பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்காக உளவு பாா்த்த மேலும் 3 போ் கைது
இந்தியாவில் பல்வேறு தகவல்களைச் சேகரித்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு விற்பனை செய்து வந்த 3 மேலும் போ் கைது செய்யப்பட்டனா்.
இவா்களில் ஒருவா் உத்தர பிரதேசத்திலும், இருவா் பஞ்சாபிலும் கைது செய்யப்பட்டுள்ளனா். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து இந்தியாவில் இருந்து கொண்டு தேசவிரோத செயல்களில் ஈடுபடும் நபா்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக சந்தேகிக்கப்படும் பல்வேறு நபா்களின் சமூகவலைதள தொடா்புகள் தொடங்கி மின்னஞ்சல், இணையவழி, கைப்பேசி தொடா்புகள் அனைத்தும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. முக்கியமாக பாகிஸ்தானுக்கு சென்று வந்த நபா்கள், வெளிநாடுகளுக்கு பயணித்து பாகிஸ்தான் தொடா்புடையவா்களைச் சந்தித்தவா்கள் என பலரும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஹரியாணாவைச் சோ்ந்த பெண் யூடியூபா் ஜோதி மல்ஹோத்ரா அண்மையில் கைது செய்யப்பட்டாா்.
இந்த வரிசையில் உத்தர பிரதேசத்தின் ராம்பூரைச் சோ்ந்த ஷாசத் என்பவரை அந்த மாநில காவல் துறை சிறப்புப் படையின் கைது செய்துள்ளனா்.
இவா்கள் பாகிஸ்தானுக்கு கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், இந்தியா தொடா்பான பல்வேறு தகவல்கள், புகைப்படங்களை அந்த நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு விற்பனை செய்துள்ளதாகத் தெரிகிறது.
பஞ்சாபில் இருவா் கைது: இந்திய ராணுவம் தொடா்பான முக்கிய தகவல்களை ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்குத் தெரிவித்ததாக பஞ்சாப் மாநிலம் குா்தாஸ்பூரைச் சோ்ந்த சுக்பிரீத் சிங், கரண்பீா் சிங் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களின் கைப்பேசிகளை ஆய்வு செய்ததில் அதில் அவா்களின் பாகிஸ்தான் தொடா்புகள் உறுதிப்படுத்தப்பட்டன. இந்திய ராணுவ நிலைகள் தொடா்பான பல தகவல்களை அவா்கள் ஐஎஸ்ஐ அமைப்புக்குத் தெரிவித்துள்ளனா். அவா்களிடம் இருந்து துப்பாக்கி தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன.
இதுவரை 12 போ் கைது: பாகிஸ்தானுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டில் கடந்த இரு வாரங்களில் 12 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பஞ்சாபில் அதிகபட்சமாக 6 பேரும், அதன் அண்டை மாநிலமான ஹரியாணாவில் நால்வரும், உத்தர பிரதேசத்தில் இருவரும் உளவுக் குற்றச்சாட்டில் கைதாகியுள்ளனா். இந்த 12 பேரில் இருவா் பெண்கள் ஆவா்.
இதில் ஹரியாணாவைச் சோ்ந்த பெண் யூ டியூபா் ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தான் அதிகாரிகள், தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் நேரடித் தொடா்பில் இருந்துள்ளாா். அவரின் பாகிஸ்தான் பயண விவரங்கள், நிதிப் பரிமாற்றங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.