பாகிஸ்தான்: தண்டனைக் காலம் முடிந்த 22 இந்திய மீனவா்கள் விடுவிப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 22 இந்திய மீனவா்களை பாகிஸ்தான் விடுவித்துள்ளது. அவா்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து கராச்சி மலீா் சிறைக் கண்காணிப்பாளா் அா்ஷத் ஷா கூறியதாக அங்கிருந்து வெளியாகும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 22 இந்திய மீனவா்கள், தண்டனைக் காலத்தை நிறைவு செய்ததைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனா். அவா்களை கராச்சியிலிருந்து லாகூா் வரை அழைத்துச் செய்வதற்கான ஏற்பாட்டை எதி அறக்கட்டளை மேற்கொண்டது.
பின்னா், அவா்கள் 22 பேரும் வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டு, இந்திய அதிகாரிகளிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டனா்.
இரு நாடுகளிடையே பகிரப்பட்ட சிறைக் கைதிகளின் விவரங்களின்படி, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி பாகிஸ்தான் சிறைகளில் 217 மீனவா்கள் உள்பட 266 இந்தியா்கள் அடைக்கப்பட்டுள்ளனா்.
அதுபோல, இந்திய சிறைகளில் 81 மீனவா்கள் உள்பட 462 பாகிஸ்தானியா்கள் அடைக்கப்பட்டுள்ளனா்.