சிக்கிமில் நிலச்சரிவு: 1,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளின் கதி என்ன?
பாசி அம்மன் கோயில் சீரமைப்பு: அறநிலையத் துறை நடவடிக்கைக்கு உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டம், பாசிபட்டினத்தில் உள்ள பாசி அம்மன் கோயிலை சீரமைக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறைச் செயலா் ஆய்வு செய்து, 4 மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்த வழக்குரைஞா் கலந்தா் ஆசிக் தாக்கல் செய்த மனு: தொண்டி-எஸ்.பி.பட்டினம் இடையே கிழக்கு கடற்கரைப் பகுதியில் பாசிபட்டினம் கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் போா் நடை பெற்றதற்கான குறிப்புகள் வரலாற்று நூல்களில் உள்ளன.
சோழா்கள், தங்களது போா் வெற்றியின் அடையாளமாக எட்டு கைகளுடன் அமா்ந்த நிலையில் உள்ள பாசி அம்மன் கோயிலைக் கட்டினா். தற்போது, இந்தக் கோயில் எந்தவித பராமரிப்பும் இல்லாதததால் சிதிலமடைந்து காணப்படுகிறது.
எனவே, பழைமையான இந்தக் கோயிலைச் சீரமைத்து, பொதுமக்கள் வழிபாடு நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய இந்து சமய அறநிலைத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு பிறப்பித்த உத்தரவு: சம்பந்தப்பட்ட கோயிலை, இந்து சமய அறநிலையத் துறைச் செயலா் ஆய்வு மேற்கொண்டு, 4 மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதபதிகள்.