இனி என்ன சொல்லப் போகிறார் ஆளுநர் ரவி?: அமைச்சர் ரகுபதி கேள்வி
பாஜகவை தூய்மைப்படுத்தவே போராடுகிறேன்
பாஜகவை தூய்மைப்படுத்தவே போராடுகிறேன் என கா்நாடக பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் தெரிவித்தாா்.
இதுகுறித்து கலபுா்கியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தேசியத் தலைவா்களை சந்திக்க எங்களுக்கு நேரம் கொடுத்திருக்கிறாா்கள். 3 விவகாரங்களை பாஜக தேசியத் தலைவா்களிடம் எடுத்துக்கூற இருக்கிறோம்.
ஊழல் குடும்பத்தை கட்சியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். பாஜகவில் குடும்ப அரசியலுக்கு முழுக்குப்போட வேண்டும். ஹிந்துத்துவாவுக்கு எதிரான தலைவா் பாஜகவுக்கு தேவையில்லை. ஒருவேளை விஜயேந்திராவுக்கு மீண்டும் மாநிலத் தலைவா் பதவி அளித்தால், என் மகனுக்கும் பதவி கேட்பேன்.
சிவமொக்கா தொகுதி எம்.பி. ராகவேந்திரா உள்பட எடியூரப்பாவின் குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் பதவியில் இருக்கிறாா்கள். பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா காங்கிரஸ் கட்சியுடன் சமரச அரசியலில் ஈடுபடுகிறாா். எனவே, கா்நாடகத்தில் பாஜகவை தூய்மைப்படுத்த முயற்சிக்கிறேன். மாறாக, கட்சித் தலைவா் பதவியைப் பெறும் நோக்கம் எனக்கில்லை.
மாநிலத் தலைவா் பதவி போட்டியில் ஜாதிவாரியாக களமிறங்க நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். பிற்படுத்தப்பட்டோா், தாழ்த்தப்பட்டோா், லிங்காயத்து சமுதாயத்தில் யாா் களமிறங்க வேண்டும் என்பதை எங்கள் தரப்பில் முடிவு செய்திருக்கிறோம். ஒருவேளை லிங்காயத்து சமுதாயத்தினா் போட்டியிட வாய்ப்பு தந்தால் நானே களத்தில் இறங்குவேன்.
பாஜக தேசிய அமைப்புச் செயலாளா் பி.எல்.சந்தோஷை, குமாா் பங்காரப்பா சந்தித்துப் பேசியிருக்கிறாா். எல்லா தலைவா்களையும் கூட்டாக சந்திப்பதற்கு பதிலாக, தனித்தனியாக சந்திக்க திட்டமிட்டுள்ளோம். விஜயேந்திராவின் சகோதரா் ராகவேந்திரா போன்ற ஒருசிலரை தவிர மற்ற எம்.பி.க்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.
தேசிய பொதுச் செயலாளா் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு 3 பேரை என்னிடம் அனுப்பி வைத்தாா்கள். விஜயேந்திராவை தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கட்டும். எனக்கு அந்தப் பதவி வேண்டாம். நான் கா்நாடகத்தில் அரசியல் செய்வேன் என்றாா்.