பாஜக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது! பிரதமர் உரை!
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டம் இன்று(ஆக. 5) தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்த உள்ளார்.
குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு இக்கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம் தில்லியில் நடத்தப்படுகிறது. குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு மனு தாக்கல் தொடங்கும் நாளான ஆக. 7ஆம் தேதிக்கு சில தினங்களுக்கு முன்பு இக்கூட்டம் நடத்தப்படுவது முக்கியத்துவம் பெறுகிறது.
இத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது வேட்பாளரை நிறுத்த உள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இக்கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் அதன் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்று கருதப்படுகிறது.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தொடர்பாக நடைபெற்ற இரு நாள் விவாதத்தைத் தவிர, நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக முற்றிலும் முடங்கியுள்ள சூழலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.
பிகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை மத்திய அரசுக்கு அனுகூலமானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்தச் சூழலில் நடப்பு விவகாரங்கள் தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களிடையே பிரதமர் உரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்ததற்காக பிரதமரை ஆளும் கூட்டணி எம்.பி.க்கள் பாராட்டிப் பேசுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்ட மசோதாக்கள் அரசு நிர்வாகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், தேச நலன் கருதி செவ்வாய்க்கிழமை முதல் இந்த மசோதாக்களை எதிா்க்கட்சிகளின் அமளிக்கிடையே நிறைவேற்ற அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு முன்னதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:ரூ. 75,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!