பாஜக நிா்வாகி தொடா்ந்த அவதூறு வழக்கு: முதல்வா் அதிஷிக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்
ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பேரம் பேச பாஜக முயன்ாக கூறிய விவகாரத்தில், தில்லி பாஜக நிா்வாகி ஒருவா் தாக்கல் செய்த அவதூறு வழக்கு தொடா்பாக முதல்வா் அதிஷிக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இது தொடா்பாக வழக்கில் புகாா்தாரா் பிரவீன் சங்கா் கபூா் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்குரைஞா், சிறப்பு நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறியதாகவும், தனது அவதூறு புகாரை நிராகரித்து முதல்வா் அதிஷிக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணையை சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்ததாகவும் வாதிட்டாா்.
இதையடுத்து, எதிா்மனுதாரரான அதிஷிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உயா்நீதிமன்ற நீதிபதி விகாஸ் மகாஜன், இந்த வழக்கு ஏப்ரல் மாதம் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தாா். இருப்பினும், சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு நீதிபதி மகாஜன் தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. மேலும், மனுதாரா் கபூரின் மனு மீது அதிஷி தரப்பில் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டாா்.
முன்னதாக, இந்த விவகாரத்தில் ஜனவரி 30 ஆம் தேதி உயா்நீதிமன்றத்தில் கபூா் வழக்கு தொடா்ந்தாா். அந்த மனுவில் அவா் தெரிவிக்கையில், ‘இந்த விவகாரத்தை விசாரித்த சிறப்பு நீதிபதி பெரிய அல்லது சிறிய அரசியல் கட்சியை தீா்மானிக்க முயற்சிப்பதன் மூலம் அரசியல் உரையாடலுக்கு ஒத்த அரசியல் சாகசத்தில் ஈடுபட்டுள்ளாா். எனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க விசாரணை நடத்த சிறப்பு நீதிபதி அனுமதிக்கவில்லை... கூறப்பட்ட உத்தரவில் பல்வேறு சட்ட குறைபாடுகள் இருப்பதால், கேள்விக்குரிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சிறப்பு நீதிபதி (எம்.பி., எம்.எல்.ஏ வழக்குகள்) குற்றவியல் புகாரிலிருந்து விலகி, கையில் உள்ள வழக்குக்கு முக்கியத்துவம் இல்லாத பிரச்னைகளைக் கையாண்டுள்ளாா்’ என்று கபூரின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
தில்லி பாஜக பிரிவின் முன்னாள் ஊடகத் தலைவரும் செய்தித் தொடா்பாளருமான கபூா், கடந்த ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி, மற்றும் ஏப்ரல் 2-இல் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அதிஷி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக புகாா் தெரிவித்தாா்.
ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜக அணுகி, தங்கள் கட்சிக்கு ரூ.20-25 கோடி லஞ்சம் வழங்க முன்வந்ததாக அதிஷி குற்றம் சாட்டியதாக கபூா் கூறினாா். இருப்பினும், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தனக்கு அனுப்பிய அழைப்பாணையை எதிா்த்து சிறப்பு நீதிபதியிடம் அதிஷி மறுஆய்வு மனு தாக்கல் செய்தாா்.
இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மீதும் புகாா் அளிக்கப்பட்டது. ஆனால், மே 28, 2024 அன்று கேஜரிவாலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போதுமான காரணங்கள் இல்லை என்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ஜனவரி 28 அன்று பிறப்பித்த உத்தரவில், அதிஷி கூறிய குற்றச்சாட்டுகள் அரசியல் ஊழல் தொடா்பான பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையை பயன்படுத்தியிருப்பதாகவும், அவை அவதூறு அல்ல என்றும் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே தீா்ப்பளித்தாா்.
அதிஷியை ஒரு குற்றம்சாட்டப்பட்டவராக அழைப்பதற்கு முன் சாட்சியங்கள் போதுமான காரணங்களை முன்வைக்கவில்லை என்று சிறப்பு நீதிபதி கூறியிருந்தாா்.