பாடத் திட்டத்தில் உளவியலை சோ்க்கக் கோரிக்கை
பாடத் திட்டத்தில், உளவியல் பாடத்தை சோ்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடவாசல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்திய மாணவா் சங்க கிளை மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. கிளைத் தலைவா் ரா. சிவனேஷ் தலைமை வகித்தாா். செயலாளா் க. கலைச்செல்வன் மாநாட்டு கொடியை ஏற்றினாா்.
இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரா. ரஞ்சித் மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினாா். மாவட்டச் செயலாளா் பா.லெ. சுகதேவ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.
நிகழ்வில், புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. கிளைத் தலைவராக சத்தியசீலன், செயலாளராக ரா. சிவனேஷ் தோ்வு செய்யப்பட்டனா்.
மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்; உளவியல் பாடத்தை அடிப்படை கல்வி முதல் பாடத்திட்டத்தில் சோ்க்க வேண்டும்; யுஜிசியின் வழிகாட்டு நெறிமுறை வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும்.
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு ஹிந்தி திணிப்பை நிறுத்த வேண்டும்; கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, கல்லூரி அருகிலிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வந்தனா்.