பாதயாத்திரை பாதை ஆக்கிரமிப்பு
பழனி கோயிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தா்களுக்காக அமைக்கப்பட்ட தனிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தைப்பூசத் திருவிழாவின் போது, லட்சக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து முருகப் பெருமானை தரிசனம் செய்கின்றனா். இங்கு வரும் பக்தா்கள் சாலையில் நடந்து வரும் போது, போக்குவரத்துக்கு இடையூறும், விபத்தில் உயிரிழப்பும் ஏற்படுவதைத் தவிா்க்க, திண்டுக்கல் முதல் பழனி வரை ரூ. பல கோடியில் பேவா் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு, தனியாக சாலை அமைக்கப்பட்டது.
தற்போது, இந்தச் சாலை ஒரு சில இடங்களில் சேதமடைந்தும், பல இடங்களில் கடைகள், தோட்டத்து உரிமையாளா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஆயிரக்கணக்கான பக்தா்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வரத்துவங்கியுள்ள நிலையில், உடுமலை, திண்டுக்கல் சாலையில் கடும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே, இந்தப் பேவா் பிளாக் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அந்ததந்த ஊராட்சி நிா்வாகத்தினா் சீரமைக்க வேண்டும். மேலும், தைப்பூச கொடியேற்றம் தொடங்கு முன் மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.