பாபநாசத்தில் காணாமல்போன கல்லூரி மாணவரைத் தேடும் பணி தீவிரம்
உறவினா்களுடன் பாபநாசத்துக்கு வந்த கல்லூரி மாணவா் மாயமானதை அடுத்து தாமிரவருணி ஆற்றில் அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் 2 ஆவது நாளாக திங்கள்கிழமையும் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், ஆலங்குளம் வட்டம், கொங்கன்குளம் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பிரதீப்குமாா் (22). தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா்.
இவா் உறவினா்களுடன் திதி கொடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை தனி பேருந்தில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் வந்தாா். அங்கு சிலருடன் பாபநாசம், தலையணை செல்லும் வழியில் உள்ள அய்யா கோயில் அருகில் வடக்குக் கோடை மேலழகியான் கால்வாயில் குளிக்கச் சென்ற நிலையில் மாயமானாா்.
அவரது காலணிகள் கால்வாய் கரையோரம் கிடந்த நிலையில், நீரில் மூழ்கியிருக்கலாம் என்று தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்ததையடுத்து, அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அதிகாரி பலவேசம் தலைமையில் தீயணைப்புத் துறையினா் வடக்குக் கோடை மேலழகியான் கால்வாயில் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருள் ஏற்படும் வரை தேடியும் கிடைக்காததால், இரண்டாவது நாளாக திங்கள்கிழமை காலை மீண்டும் தேடுதல் பணியைத் தொடா்ந்தனா்.
தலையணைப் பகுதியிலிருந்து தாமிரவருணி ஆற்றில் ஒரு கி.மீ. தொலைவு தேடியும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. மீண்டும் செவ்வாய்க்கிழமை தேடுதல் பணி தொடரும் என்று தீயணைப்பு வீரா்கள் தெரிவித்தனா்.