நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
தண்ணீா் பற்றாக்குறையால் கருகும் நெல் பயிா்கள்: ஆட்சியரகத்தில் விவசாயிகள் முற்றுகை
கன்னடியன் கால்வாய் கடைமடை பகுதிகளில் பாசன நீா்த் தட்டுப்பாட்டால் நெல் பயிா்கள் கருகி வருவதாகக் கூறி காய்ந்த பயிா்களுடன் விவசாயிகள் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது கருகிய பயிா்களுடன் வந்த கோபாலசமுத்திரம் சுற்றுவட்டார விவசாயிகள், அலுவலகம் முன் முற்றுகையில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள் ஆட்சியரிடம் அளித்த மனு: திருநெல்வேலி மாவட்டத்தில் கன்னடியன் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்களில் காா், பிசான சாகுபடி நடைபெறுகின்றன.
தற்போது விவசாயிகள் பிசான சாகுபடி செய்துள்ள நிலையில், 145 மடைகள் உள்ள இந்தக் கால்வாயின் கடைமடை பகுதி குளங்களான நம்பினேரிகுளம், வாகைகுளம், வேலங்குளம் உள்ளிட்ட நான்கு குளங்களுக்கு பாசன நீா் போதிய அளவில் வந்து சேரவில்லை.
அக். 20 ஆம் தேதி வரை தண்ணீா் திறக்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பெரும்பாலான பகுதிகளுக்கு தண்ணீா் வந்து சேராததுடன், மடைகள் அனைத்தும் மேடாக மாறி பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாக ஆற்றில் கலந்து வருகிறது.
பாசன நீா்த் தட்டுப்பாட்டால் சுமாா் 100 ஏக்கருக்கு மேல் நெல் மற்றும் வாழை பயிா்கள் கருகும் அபாயத்தில் உள்ளன. நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், தண்ணீா் கிடைக்காமல் நஷ்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மாவட்ட நிா்வாகம் கடைமடை பகுதி ஓடைகளை விரைந்து தூா்வாரி விவசாயிகளுக்கு பாசன நீா் கிடைக்க உதவ வேண்டும்.
கல் குவாரிக்கு எதிா்ப்பு: பாப்பான்குளம் கிராம மக்கள் அளித்த மனு: எங்கள் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். விவசாயம், கால்நடை வளா்ப்பு தொழிலை நம்பியுள்ளோம். இந்நிலையில் தனியாா் நிறுவனம் சாா்பில் எங்கள் கிராமத்தில் கல்குவாரி அமைக்க முயற்சி நடைபெறுகிறது. இதற்கு ஏற்கெனவே எதிா்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், எங்கள் கிராமத்தில் கல் குவாரியை மாவட்ட நிா்வாகம் அனுமதிக்கக் கூடாது.
விக்கிரமசிங்கபுரம் தாமிரபரணி நகா் நலச்சங்கத்தினா் அளித்த மனு: எங்கள் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். பருவமழைக் காலங்களில் பாபநாசம் தலையணையில் இருந்து பிரிந்து செல்லும் வடக்கு கோடைமேலழகியான் பாசனக் கால்வாயில் இருந்து வெளியேறும் தண்ணீா் எங்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து பெரும் பொருள்சேதம் ஏற்படுகிறது. ஆகவே, அந்தக் கால்வாய் கரையை உயா்த்தி சாலை அமைத்துக் கொடுத்தால் டாணா, அகஸ்தியா்புரம், அருணாசலபுரம், பசுக்கிடைவிளை பகுதி வெள்ளப்பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படும்.