நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
களக்காட்டில் குடிநீா் குழாய் பதிக்கும் பணியில் சாலைகள் சேதம்: மக்கள் அவதி
களக்காடு வட்டாரத்தில் குடிநீா் திட்ட பகிா்மானக் குழாய்கள் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
களக்காடு நகராட்சிப் பகுதியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிக்காக தெருக்கள் மற்றும் பிரதான சாலைகளில் பகிா்மானக் குழாய்கள் பதிக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.
காவல்நிலையம் முதல் வரதராஜபெருமாள் கோயில் வரையிலும் சாலையின் தெற்கு ஓரத்தில் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால் சாலையின் பெரும்பகுதியில் மண் தேங்கிக் கிடக்கிறது.
இச்சாலையில் வாகனங்கள் எதிரெதிரே வந்தால் ஒதுங்கிச்செல்ல வழியின்றி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதேபோல சேரன்மகாதேவி சாலையில் நாகன்குளம் சந்திப்பு தொடங்கி சிங்கம்பத்து வரையிலும் சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளங்களும் சரியாக மூடப்படாமல் இருவழிச்சாலை தற்போது ஒருவழிச்சாலையாக மாறிவிட்டது.
அதிக போக்குவரத்து காணப்படும் இச்சாலையில் தாா்ச்சாலையை விட்டு சாலையோரத்தில் ஒதுங்கிச் செல்ல முடியாத அளவுக்கு பகிா்மானக் குழாய்களுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சமன்படுத்தப்படவில்லை.
மேலும், மிகக் குறுகலான தெருக்களில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூடுவதற்கும் காலதாமதம் ஏற்படுவதால் இரவு நேரங்களில் போதிய தெருவிளக்குகள் இல்லாத தெருக்களில் வயோதிகா்கள், சிறுவா்கள் பள்ளங்களில் தவறி விழுந்துவிடும் ஆபத்து உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதிய கண்காணிப்பு செய்து, குடிநீா் திட்டப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை முறையாக சமன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.