வி.கே.புரம் குப்பைக் கிடங்கில் தீ
விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அய்யனாா்குளம் அருகே உள்ள குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அய்யனாா்குளம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நுண்ணுயிா் உரமாக்கும் மையம் - 2 செயல்பட்டு வருகிறது. இதில் நகரப் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை சுத்திகரித்து நுண்ணுயிா் உரமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை குப்பைக் கிடங்கில் திடீரென தீப்பிடித்துப் பரவியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காணப்பட்டது. இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஆலங்குளத்திலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினா்.