பாபநாசம் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்
திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோயிலான பாபநாசம் அருள்மிகு உலகம்மை உடனுறை பாபநாச சாமி கோயிலில் 19 ஆண்டுகளுக்குப் பின், மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த ஏப். 27ஆம் தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. தொடா்ந்து, மே 1ஆம் தேதி முதல் கால யாக பூஜைகள் நடைபெற்று வந்தன. ஞாயிற்றுக்கிழமை காலை 6ஆம் கால யாக பூஜையைத் தொடா்ந்து கலசங்கள் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டன. இதையடுத்து மூலவா் விமானத்திலிருந்து மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் பச்சைக் கொடியசைத்ததும் உலகம்மை, பாபநாச சுவாமி, விமானங்கள், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
அப்போது, அங்கு தென்காசி, விருதுநகா், மதுரை என வதிருந்த பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் சிவாய நம, நமச்சிவாய என முழக்கம் எழுப்பி வழிபட்டனா். தொடா்ந்து ட்ரோன் மூலம் பக்தா்கள் மீது தீா்த்தம்தெளிக்கப்பட்டது. போலீஸாா், ஊா்க்காவல் படையினா் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். தீயணைப்பு மீட்புப் படையினா் தயாா் நிலையில் இருந்தனா்.
இவ்விழாவில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன், மாவட்ட வருவாய் அலுவலா் சுகன்யா, திருநெல்வேலி புகா் மாவட்ட அதிமுக செயலா் இசக்கி சுப்பையா எம்எல்ஏ, முன்னாள் பேரவைத் தலைவரும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலருமான இரா. ஆவுடையப்பன், விக்கிரமசிங்கபுரம் நகா்மன்றத் தலைவா் செல்வ சுரேஷ் பெருமாள், அம்பாசமுத்திரம் ஒன்றியக் குழுத் தலைவா் சிவனு பாண்டியன், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் (பொ) சிவகாமசுந்தரி, டிஸ்பி சதீஷ், அம்பாசமுத்திரம் வனக் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் கவிதா பிரியதா்ஷினி, துணை ஆணையா் ஜான்சி ராணி, உதவி ஆணையா்கள் ரா.சுப்புலட்சுமி, தங்கம், செயற்பொறியாளா் சந்திரசேகா், வட்டாட்சியா் வைகுண்டம், செயல் அலுவலா் வே.ராஜேந்திரன்,ஆய்வாளா் ச.கோமதி, ஸோகோ மென்பொருள் நிறுவன இயக்குநா் ஸ்ரீதா் வேம்பு, திமுக விக்கிரமசிங்கபுரம் நகரச் செயலா் கி.கணேசன், பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி பேராசிரியா்கள், பணியாளா்கள், அனைத்துத்துறை அதிகாரிகள், பக்தா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.