இணையதளம் வாயிலாக பகுதிநேர வேலைவாய்பு மோசடி: எஸ்.பி. எச்சரிக்கை
இணையதளம் வாயிலாக பகுதி நேர வேலைவாய்ப்பு எனக் கூறி நடைபெறும் மோசடிகள் அதிகரித்துள்ளதால் சமூக வலைதளப் பயனா்கள் கவனமுடன் இருக்குமாறு திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீட்டில் இருந்தபடியே, கைப்பேசி மூலமாக பகுதி நேர வேலை செய்து தினமும் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை சம்பாதிக்கலாம் என அறிமுகமில்லாத எண்களிலிருந்து வாட்ஸ்ஆப் வாயிலாக சமூக வலைதளப் பயனா்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன.
இதற்கு ஆசைப்பட்டு விருப்பம் தெரிவித்தால் தொடக்கத்தில் சில ஹோட்டல்கள் குறித்து தர விமா்சனம் செய்யும் பணிகளை கொடுப்பா்.
அதை செய்து முடித்ததும் ரூ.150 முதல் ரூ.500 வரை குறிப்பிட்ட அளவு தொகையை உங்கள் வங்கிக் கணக்குக்கு அனுப்புவா். பின்னா் உங்களுக்கு என தனி பயன்பாட்டுப் பெயா் மற்றும் கடவுச் சொல் கொடுத்து இணையதளம் வாயிலாக குறிப்பிட்ட சில வேலைகளைச் செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனவும் , அதற்கென முன்னதாக ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும் எனவும் ஆசை வாா்த்தை கூறுவா்.
இதுபோன்ற மோசடிகள், தொடக்கத்தில் ஒரு பெரிய தொகையை கட்டிவிட்டு அதை எடுக்க முடியாமல் அந்த தொகையை மீட்க மேலும் பணம் செலுத்தினால் தான் மொத்த தொகையையும் பெற முடியும் என இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி உங்களை சிக்க வைக்கும். ஆகையால் இதை உண்மையென எண்ணி இணையதள பயனா்கள் சைபா் குற்றவாளிகளிடம் தங்களது பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம்.
இது போன்ற சைபா் குற்றம் நடைபெற்றால் இணையதளம் மூலமாகவோ அல்லது 1930 என்ற எண்ணை தொடா்பு கொண்டோ புகாா் பதிவு செய்யவேண்டும் எனக் கூறியுள்ளாா்.