அமெரிக்காவில் இருந்து 682 இந்தியா்கள் நாடு கடத்தல்: இந்திய வெளியுறவு அமைச்சகம்
பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாா் இல்லத்தின் மேற்கூரை கடந்த 25 ஆம் தேதி இடிந்து விழுந்து சேதமடைந்த நிலையில் அங்கு பொதுப்பணித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணிகளை அமைச்சா் பி. கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
பாரதியாா் இல்லத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் சனிக்கிழமை இரவு நேரில் சென்று பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன், சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை காலை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
100 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி தரும் விதத்தில் பணிகளை தரமாக மேற்கொள்ளவும் பழைமை மாறாமல் சீரமைக்கவும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினா்.
இந்த ஆய்வின் போது கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி, எட்டயபுரம் தாசில்தாா் சுபா, பாரதி இல்ல காப்பாளா் மகாதேவி, பேரூா் கழக செயலா் பாரதி கணேசன், ஒன்றிய செயலா்கள் ராதாகிருஷ்ணன், நவநீதகண்ணன், அன்புராஜன், பேரூராட்சி மன்ற உறுப்பினா் மணிகண்டன் ராஜாமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.