`உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்’ - பதவியேற்ற 8 மணிநேரத்தில் அதிபர்...
பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: நிகழாண்டில் 272 இடங்கள் காலி
சென்னை: பாரம்பரிய மருத்துவம் மற்றும் யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளில் நிகழாண்டில் 272 இடங்கள் காலியாக உள்ளன. பல்வேறு கட்டங்களாகவும், நேரடி முறையிலும் கலந்தாய்வு நடத்தப்பட்ட பிறகும் இந்த இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
தமிழகத்தில் இந்திய மருத்துவம் ஹோமியோபதி துறையின் கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அடுத்த கோட்டாரில் ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி ஆகியவை உள்ளன.
இந்த 5 அரசுக் கல்லூரிகளில் சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு 330 இடங்களும், 30 தனியாா் கல்லூரிகளில் உள்ள 1,980 இடங்களும் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீடுக்குப் பிறகு மீதமுள்ள இடங்களுக்கு நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வந்தது.
அதேபோன்று அரசு, தனியாா் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் பிஎன்ஒய்எஸ் எனப்படும் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு1,660 இடங்கள் உள்ளன. குறிப்பாக, 2 அரசுக் கல்லூரிகளில் 160 இடங்களும், 16 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 960 இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 540 இடங்களும் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் அதற்கான மாணவா் சோ்க்கை நிகழாண்டு நடைபெற்றது.
பல்வேறுகட்ட கலந்தாய்வுக்குப் பிறகு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி, யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை நிகழாண்டில் ஆயுா்வேதம் படிப்பில் 5 இடங்களும், ஹோமியோபதியில் 19 இடங்களும் காலியாக உள்ளன.
யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகளில் மொத்தம் 248 இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக இந்திய மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.