9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!
பாலஸ்தீனர்களால் கடத்தப்பட்ட 10 இந்திய கட்டடத் தொழிலாளிகள் மீட்பு!
பாலஸ்தீன மக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த 10 கட்டடத் தொழிலாளர்களை இஸ்ரேல் படையினர் வியாழக்கிழமை இரவு பத்திரமாக மீட்டுள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையே நடைபெற்று வந்த சண்டை, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த ஒரு மாதமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் பிணைக் கைதிகளை படிப்படியாக விடுவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் உள்ள அல்-சாயெம் என்ற கிராமத்துக்கு கட்டட வேலை இருப்பதாகக் கூறி 10 இந்தியர் தொழிலாளர்களை இஸ்ரேலில் இருந்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவர்களிடம் இருந்த பாஸ்போர்டுகளை பறிமுதல் செய்து 10 பேரையும் அடைத்து வைத்துள்ளனர். மேலும், இந்தியர்களின் பாஸ்போர்ட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.
இதுதொடர்பாக தகவலறிந்த இஸ்ரேல் படையினர் வியாழக்கிழமை இரவு நடத்திய ஆப்ரேஷனில் 10 இந்திய கட்டடத் தொழிலாளிகளையும் மீட்டு இஸ்ரேலுக்கு அழைத்து வந்து பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளனர்.
இதையும் படிக்க : கொடநாடு வழக்கு: இபிஎஸ்ஸின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு சிபிசிஐடி சம்மன்!
இந்த செய்தியை உறுதி செய்துள்ள இந்திய தூதரகம் தெரிவித்திருப்பதாவது:
”மேற்குக் கரையில் காணாமல் போன 10 இந்திய கட்டடத் தொழிலாளர்களை இஸ்ரேல் அதிகாரிகள் கண்டுபிடித்து இஸ்ரேலுக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இஸ்ரேல் அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளது. தொழிலாளிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர், 2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட போருக்கு பிறகு பாலஸ்தீன கட்டடத் தொழிலாளிகளுக்கு இஸ்ரேலுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது.
அவர்களின் வெற்றிடத்தை நிரப்புவதற்காக இந்தியாவில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் 16,000 கட்டடத் தொழிலாளிகள் இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.