``நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேனா..?" - கனிமொழி உள்ளிட்டோரின் விமர்சனங்களுக்கு பவ...
பாலியல் குற்றங்களின் மையமாகும் ஹம்பி! வெளிநாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!
பெங்களூரு : கர்நாடகத்தில் வெளிநாட்டுப் பெண்மணி ஒருவர் மீண்டும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹம்பியில் கடந்த வாரம் நடைபெற்ற ‘ஹம்பி திருவிழாவைக்’ கண்டுகளிக்க வருகை தந்திருந்த இஸ்ரேல் பெண் ஒருவருக்கு, அங்கிருந்த 3 இளைஞர்கள் பாலியல் தொல்லையளித்து துன்புறுத்தியுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியைச் சேர்ந்தவொரு ஆட்டோ ஓட்டுநர், உடனடியாக அந்த இளைஞர்களை விரட்டி முற்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆட்டோ ஓட்டுநரின் துணிச்சலான செயலால் வெளிநாட்டுப் பெண்மணி அந்த இளைஞர்களிடமிருந்து தப்பியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநருடன் காவல் நிலையம் சென்ற வெளிநாட்டுப் பெண்மணி, தாங்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து புகாரளித்த நிலையில், மேற்கண்ட இளைஞர்கள் மூவர் மீதும் காவல்துறை வழக்குப்பதிந்துள்ளது. ஆனால், வெளிநாட்டுப் பெண் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து மேற்கண்ட இளைஞர்கள் மீது வழக்கு பதிய காவல் துறையினர் மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, கீழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இளைஞர்கள் மூவரும், ஆட்டோ ஓட்டுநரை தாங்கள் தாக்கியதாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, இனிமேல் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று அவர்கள் மூவரும் உறுதியளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் மூவரிடமும் மன்னிப்பு கடிதம் பெற்றுக் கொண்டு நீதிமன்றம் அவர்களை விடுவித்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள இஸ்ரேல் பெண்மணி, தனக்கு இழைக்கப்பட்ட கொடூரம் குறித்து தூதரக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து அந்த இளைஞர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகத்தெரிவித்துள்ளார்.
புராதனச் சின்னமாகத் திகழும் ஹம்பியில் அண்மைக் காலங்களில் குற்றங்கள் அதிலும் குறிப்பாக, பெண்கள் மீதான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதையடுத்து, அப்பகுதியில் காவல் துறை கன்காணிப்பை தீவிரப்படுத்தியிருப்பதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இதே மார்ச் மாத தொடக்கத்தில் ஹம்பிக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டுக் குழுவினரை உள்ளூரைச் சேர்ந்த 3 நபர்கள் தாக்கியதுடன், அந்த குழுவிலிருந்த இஸ்ரேலியப் பெண்னை 3 நபர்களும் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில், மீண்டும் அதுபோன்றதொரு கொடூரத்தை அரங்கேற்ற சமூக விரோதிகள் சிலர் முயற்சித்திருப்பது சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.