பாலியல் வழக்கில் கைதான விவகாரம்: யூடியூபர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போல வீடியோ எடுத்த சம்பவத்தில் யூடியூபர் திவ்யா, அவரின் நண்பர் கார்த்திக், சித்ரா, ஆனந்த் ராமன் ஆகிய நான்கு பேர் கடந்த 29-ம் தேதி போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில், போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்ட யூடியூபர் திவ்யா, கார்த்திக், ஆனந்த்ராமன் ஆகியோர் சார்பில் ஜாமீன் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், யூடியூபர் திவ்யா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோடிமுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "இந்த வழக்கைப் பொறுத்தவரை, நடந்த விஷயம் வேறு, முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது வேறு. முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதைப்போல திவ்யா கள்ளச்சியும், கார்த்தியும் சேர்ந்து அந்த வீடியோவை எடுக்கவில்லை. வழக்கில் மூன்றாம் எதிரியாக குற்றம்சட்டப்பட்டுள்ள சித்ராதான், யூடியூப் பிரபலங்களாக இருப்பவர்களிடம் பணம் பறிக்கும் எண்ணத்துடன் சூழ்ச்சி செய்து ஆட்களை செட் செய்து வீடியோவை எடுத்துள்ளார். வீடியோவில் இருப்பதை உண்மை புலனாய்வு செய்து அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தால் இந்த வழக்கிற்கும் திவ்யா கள்ளச்சி மற்றும் கார்த்திக் ஆகியோருக்கும் தொடர்பு இல்லை என தெரியவரும். அதுபோல் முறையாக விசாரணைக்கு வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம்" என கூறினார்.