பிகாரில் போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு: 4 பேர் கைது
பிகாரில் போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தின் பிதா பகுதியில் உள்ள மைதானம் அருகே சனிக்கிழமை இரவு போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சோதனையின் போது பழைய பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றனர்.
ஆனால் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றிருக்கிறார்.
மகாராஷ்டிரம்: திருமண நிகழ்வில் மகளை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற சிஆர்பிஎஃப் அதிகாரி
உடனே போலீஸார் வாகனத்தைப் பின்தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் அதனை மடக்கிப் பிடித்தனர். அப்போது உள்ளூர்வாசிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வாகனத்தை விடுவிக்க முயன்றனர். அந்த நேரத்தில் போலீஸார் மீது அங்கிருந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர்.
தற்காப்புக்காக போலீஸாரும் பதிலடி கொடுத்தனர்.
இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நிகழ்விடத்துக்கு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களைக் கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்று போலீஸாரின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.