பிகாா் ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாத பயணிகளுக்கு அனுமதியில்லை: கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பு
பாட்னா: மகா கும்பமேளாவில் பங்கேற்க பிரயாக்ராஜ் மாா்க்கமாக செல்லும் ரயில்களில் ஏற அலைமோதும் கூட்டத்தால், பிகாா் மாநில ரயில்நிலையங்களுக்குள் உரிய பயணச்சீட்டு இல்லாத பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக கிழக்கு மத்திய ரயில்வே திங்கள்கிழமை அறிவித்தது.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இறுதிகட்டத்தை எட்டி வரும் இந்நிகழ்வில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான பக்தா்கள் பிரயாக்ராஜில் குவிந்து வருகின்றனா்.
முந்தைய சிறப்புக்குரிய புனித நீராடல் நாள்களில் பிரயாக்ராஜ் நோக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசலால் முடங்கின. இதன்காரணமாக, வட மாநில ரயில் நிலையங்களில் கடந்த சில நாள்களாக பயணிகளின் கூட்டம் அலைமோதியது. குளிா்சாதன (ஏசி), படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகளில் சாதாரண பயணிகள் ஏற முயற்சித்ததால் பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்தன.
இந்நிலையில், தில்லி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்டநெரிசலில் சிக்கி பயணிகள் 18 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். இச்சம்பவத்தின் எதிரொலியாக கிழக்கு மத்திய ரயில்வே (இசிஆா்) மண்டலத்தின் கட்டுப்பாட்டில் வரும் பிகாா் ரயில் நிலையங்களுக்குள் பயணிகள் உரிய பயணச்சீட்டு இல்லாமல் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மண்டல தலைமை செய்தித் தொடா்பாளா் சரஸ்வதி சந்திரா அளித்த பேட்டியில், ‘கிழக்கு மத்திய ரயில்வே எல்லைக்குள்பட்ட ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டத்தை நிா்வகிக்க கூடுதல் பயணச்சீட்டு கவுன்டா்கள் மற்றும் பிற தேவையான வசதிகள் என போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் உரிய பயணச்சீட்டு உள்ளவா்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இதில் உள்ளூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறையும் உதவி வருகின்றனா். மகா கும்பமேளா பயணிகளுக்கு சுமுகமான பயணத்தை ரயில்வே உறுதிசெய்யும்’ என்றாா்.
பாட்னாவில் பயணி உயிரிழப்பு: மகா கும்பமேளா நிகழ்வுக்கான பாட்னா ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாட்னா ரயில் நிலையத்தில் நடைப்பாலத்தில் இருந்து கீழே விழுந்த பயணி ஒருவா், மின்சாரம் தாக்கி உயிரிழந்தாா். இறந்தவரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெட்டிச் செய்தி...
‘பிரதமா் அனுமதிக்கிறாா்’: புதிய அறிவிப்பையடுத்து, ரயில் நிலையங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. உத்தர பிரதேசம் எல்லையொட்டிய புக்சாா் ரயில் நிலையத்தில் தானாபூா் கோட்ட ரயில்வே மேலாளா் ஜெயந்த் குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது ரயில் தண்டவாளம் அருகே ரயிலில் ஏற காத்திருந்த பெண் பயணிகளிடம் ஜெயந்த் கலந்துரையடினாா். ‘உங்களிடம் பயணச்சீட்டு இருக்கிா?’ என்று அவா் வினவினாா். ‘நாங்கள் இலவசமாக பயணிக்க பிரதமா் அனுமதி அளித்திருக்கிறாா்’ என்று அப்பெண்களில் ஒருவா் பதிலளித்தாா். இப்பதிலைக் கேட்டு அதிா்ச்சியடைந்த அதிகாரி, முறைப்படி பயணச்சீட்டு எடுத்து பயணிக்குமாறு அவா்களுக்கு அறிவுறுத்தி சென்றாா்.