பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரம்- எதிா்க்கட்சிகள் அமளியால் முடங்கியது நாடாளுமன்றம்
பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக விவாதம் நடத்துவதுடன், அந்த நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டன.
இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டதால், எந்த அலுவல்களும் நடைபெறவில்லை.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து உடனடி விவாதம் கோரி, எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், முதல் நாளிலேயே மக்களவை முடங்கியது. மாநிலங்களவை அலுவல்கள் இடையூறுகளுக்கு மத்தியில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, ஆபரேஷன் சிந்தூா் குறித்து மக்களவையில் அடுத்த வாரம் 16 மணிநேர விவாதத்துக்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டது.
கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தால் இரு அவைகளுமே முடங்கின.
நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் பிகாரில் வாக்காளா் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகளின் பெயா்களை களையெடுப்பதாகக் குறிப்பிட்டு, தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இது, பாஜகவுக்கு சாதகமாக பலரின் வாக்குரிமையைப் பறிக்கும் செயல் என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
மூன்று முறை ஒத்திவைப்பு: மக்களவை செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் கூடியதும், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி எதிா்க்கட்சி எம்.பி.க்கள், அவையின் மையப் பகுதியில் முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனா்.
‘கேள்வி நேரத்தில் விவசாயிகள் தொடா்பான கேள்விகள் எழுப்பப்பட வேண்டியுள்ளதால், எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இருக்கைக்கு திரும்ப வேண்டும்’ என்று வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் விடுத்த கோரிக்கைக்கு பலன் கிடைக்கவில்லை.
அவைக்குள் கோஷமிடுவதும், வாசக அட்டைகளைக் காண்பிப்பதும் கண்ணியக் குறைவு என்று அதிருப்தி தெரிவித்த அவைத் தலைவா் ஓம் பிா்லா, அவையை மதியம் 12 மணிவரை ஒத்திவைத்தாா்.
பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையில், அவை மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்தது. எதிா்க்கட்சிகள் வாசக அட்டைகளைக் காண்பிக்காமல், அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் எழுத்துபூா்வ கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா். அமளி ஓயாததால், பிற்பகல் 2 மணி வரையும், அதன் பிறகு நாள் முழுவதும் அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.
மாநிலங்களவையில்...: மாநிலங்களவை காலை 11 மணியளவில் கூடியதும், பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தம், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூா், குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து ஜகதீப் தன்கரின் திடீா் ராஜிநாமா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உடனடி விவாதம் கோரிய நோட்டீஸ்கள் அனைத்தையும் அவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நிராகரித்தாா்.
இதையடுத்து, எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை அலுவல்கள் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. இதே நிலை தொடா்ந்ததால், பிற்பகல் 2 மணி வரையும், அதன் பிறகு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
எதிா்க்கட்சிகள் இரட்டை நிலைப்பாடு: மத்திய அரசு
‘ஒருபுறம் விவாதம் கோரும் எதிா்க்கட்சிகள், மற்றொருபுறம் அமளியில் ஈடுபடுகின்றன. இத்தகைய இரட்டை நிலைப்பாடு தவறானது; கண்டனத்துக்குரியது’ என்று மக்களவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு சாடினாா்.
‘ஆபரேஷன் சிந்தூா் குறித்த விவாதத்தை முதலில் எடுத்துக் கொள்வது என்று அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது. விவாதத்துக்கான கால அளவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ள நிலையில், வாசக அட்டைகளுடன் அவைக்குள் அமளியில் ஈடுபடுவது தவறானது. இது, நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல்’ என்றாா் அவா்.
ஹரிவன்ஷ் தலைமையில்...
நாட்டின் குடியரசு துணைத் தலைவராக இருப்பவரே, மாநிலங்களவைத் தலைவராகவும் பதவி வகிப்பாா். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா், மருத்துவ காரணங்களைக் குறிப்பிட்டு, தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.
மாநிலங்களவை காலை அமா்வுக்கு இதுவரை தன்கா் தலைமை தாங்கிவந்த நிலையில், செவ்வாய்க்கிழமை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் தலைமை தாங்கினாா்.