பிசிசிஐ ஒப்பந்தம்: ரோஹித், கோலிக்கு ஏ+; ஸ்ரேயாஸ், இஷான் சேர்ப்பு! முழு விவரம்..
2025 - 26 ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ருதுராஜ் ஜெய்க்வாட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டு பட்டியலில் இருந்த ஷர்துல் தாக்கூர், கேஎஸ் பரத், ஜித்தேஷ் சர்மா, ஆவேஷ் கான் ஆகியோர் ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2025 - 26 ஆம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்தத்தை பிசிசிஐ திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
ஏ+ தரம்
டி20 தொடரில் இருந்து ஓய்வு பெற்றாலும் ரோஹித் சர்மா மற்றும் கோலி ஏ+ தரத்திலான ஒப்பந்தத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்கள். இவர்களுடன் கடந்தாண்டு இடம்பெற்றிருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் பும்ராவும் தொடர்கிறார்கள்.
ஏ தரம்
கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, முகமது சீராஜ், ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோருக்கு ஏ தரத்திலான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற அஸ்வின் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், பி தரத்தில் இருந்து ஏ தரத்துக்கு ரிஷப் பந்த் உயர்த்தப்பட்டுள்ளார்.
பி தரம்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் பி தர ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவருடன் இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோருக்கும் பி தரத்திலான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
சி தரம்
இந்திய அணியின் அதிகளவிலான வீரர்களுக்கு சி தர ஒப்பந்தம் வழங்கப்படும்.
ரின்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் தூபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரஜத் பட்டிதார், துருவ் ஜூரேல், சர்ஃபராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்ரவர்த்தி, நிதிஷ் ராணா ஆகிய 19 வீரர்கள் இந்தாண்டு இடம்பெற்றுள்ளனர்.
கடந்தாண்டு இந்த பட்டியலில் இருந்த ஷர்துல் தாக்கூர், கேஎஸ் பரத், ஜித்தேஷ் சர்மா, ஆவேஷ் கான் ஆகியோர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இஷான் கிஷனை கடந்தாண்டு ஒப்பந்ததில் இருந்து பிசிசிஐ நீக்கிய நிலையில், தற்போது மீண்டும் சேர்த்துள்ளது.
மேலும், 3 டெஸ்ட் போட்டிகள் அல்லது 8 ஒருநாள் போட்டிகள் அல்லது 5 டி20 போட்டிகளில் விளையாடும் வீரரையும் சி கிரேடு பட்டியலில் பிசிசிஐ சேர்த்துவிடும்.
4 தர பட்டியலிலும் சேர்த்து மொத்த 34 வீரர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
சம்பளம் எவ்வளவு?
ஏ+ தரத்தில் ஒப்பந்தம் செய்யும் வீரர்களுக்கு ரூ. 7 கோடியும், ஏ தர வீரர்களுக்கு ரூ. 5 கோடியும், பி தர வீரர்களுக்கு 3 கோடியும், சி தர வீரர்களுக்கு ஒரு கோடியும் சம்பளமாக வழங்கப்படும்.