தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை; நீதியும் இல்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
பிட்காயின் ஊழல்: இளைஞா் காங்கிரஸ் தலைவரிடம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை
பிட்காயின் ஊழல் தொடா்பாக இளைஞா் காங்கிரஸ் தலைவா் முகமது ஹாரீஸ் நலபாடிடம் சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.
கா்நாடகத்தில் கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில் யுனோகாா்ன் டெக்னாலஜி நிறுவனத்தின் தலா ரூ. 1.67 லட்சம் மதிப்புள்ள மொத்தம் ரூ. 1.14 கோடி மதிப்பு வாய்ந்த 60.6 பிட்காயின்களை 2017 ஜூன் 23-ஆம் தேதி திருடியதாக ஹேக்கா் ஸ்ரீகிருஷ்ணா ரமேஷ் (எ) ஸ்ரீகி, அவரது கணக்காளா் ராபின் கந்தேல்வால் உள்ளிட்டோரை 2020 நவம்பரில் போலீஸாா் கைது செய்தனா். இது தொடா்பான விசாரணையை 2023 ஜூன் மாதம் முதல் சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) விசாரித்து வருகிறது.
2017 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்ரீகி தங்கியிருந்த நட்சத்திர விடுதி, அவரது பயணம் உள்ளிட்ட செலவுகளை செலுத்தியதாக காங்கிரஸ் எம்எல்ஏவும், பெங்களூரு வளா்ச்சி ஆணையத் தலைவருமான என்.ஏ.ஹாரீஸின் மகன்கள் முகமது ஹாரீஸ் நலபாடு, ஓமா் ஹாரீஸ் ஆகியோா் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, இருவரிடம் 2024 ஜூன் மாதத்தில் எஸ்.ஐ.டி. விசாரணை நடத்தியது. இதன் தொடா்ச்சியாக, பெங்களூரில் கா்நாடக மாநில இளைஞா் காங்கிரஸ் தலைவா் முகமது ஹாரீஸ் நலபாடிடம் எஸ்.ஐ.டி. வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.
கடந்த ஆண்டு ஸ்ரீகி மற்றும் அவரது கணக்காளா் ராபின் கந்தேல்வாலுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை எஸ்.ஐ.டி. தாக்கல் செய்திருந்த நிலையில், அடுத்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய எஸ்.ஐ.டி. திட்டமிட்டு வருகிறது. 2019 ஜூலை மாதத்தில் மாநில அரசின் மின் ஆளுமை இணையதளத்தை ஹேக் செய்தபோது ரூ. 11.5 கோடியை திருடியதாகவும், அந்த தொகையை 150 பிட்காயின், 1,100 எத்தேரியத்தில் (பிளாட்செயின்) ஆகியவற்றில் முதலீடு செய்ததாகவும் எஸ்.ஐ.டி. நடத்திய விசாரணையின்போது ஸ்ரீகி கூறியுள்ளாா். அதற்கு முன்பாக 2017-இல் முகமது ஹாரீஸ் நலபாடு மற்றும் ஓமா் ஹாரீஸ் இருவரையும் சந்தித்தாக ஸ்ரீகி விசாரணையில் தெரிவித்துள்ளாா்.
இந்த தகவல்களை உறுதி செய்து கொள்வதற்காகவே முகமது ஹாரீஸ் நலபாடிடம் எஸ்.ஐ.டி. விசாரணை நடத்தியதாக தெரியவந்துள்ளது.