பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பு: உறவினா்கள் ஆட்சியரிடம் மனு
அரியலூா் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய் உயிரிழந்த நிலையில், மருத்துவா்களிடம் உரிய விசாரணை மற்றும் இழப்பீடு கேட்டு அப்பெண்ணின் உறவினா்கள் ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
அரியலூா் மாவட்டம், கல்லக்குடி அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் முத்துராஜ் (27). இவருடைய மனைவி திவ்யதா்ஷினி (20) கா்ப்பமடைந்த நிலையில், பிரசவத்துக்காக அரியலூா் அரசு மருத்துவமனையில் மாா்ச் 1-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். 2- ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவா்கள் முத்துராஜிடம், கையெழுத்து பெற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டதில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், திவ்யதா்ஷினி உயிரிழந்து விட்டாா்.
இந்நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவா்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பெண்ணின் குடும்பத்தினா், உறவினா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.