பிரதமர் மோடியுடன் சந்திப்பு; `அரசியல் பேசவில்லை' - மாதுளை பழங்களை வழங்கிய சரத் பவார்!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவார் எப்போதும் விவசாயிகள் உரிமைக்காக மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்களை சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. இதனால் சில நாட்கள் முடங்கி இருந்த சரத் பவார் தனது 84 வது வயதிலும், விவசாயிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இன்று சரத் பவார் மகாராஷ்டிரா மாதுளை விவசாயிகளுடன் சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அதோடு மகாராஷ்டிராவில் விளைந்த மாதுளம் பழங்களை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கினார். மகாராஷ்டிராவில் சதாரா மற்றும் பால்டன் பகுதியில் அதிக அளவில் மாதுளம் விளைவிக்கப்படுகிறது.
இப்பழம் அங்கிருந்து இந்தியா முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. பிரதமருடனான சந்திப்பு குறித்து சரத் பவார் அளித்த பேட்டியில், ''பிரதமருடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை" என்று மட்டும் தெரிவித்தார். பிரதமரை தொடர்ந்து துணை ஜனாதிபதி ஜெக்தீப் ஜன்கரையும் சரத் பவார் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போதும் ஜெக்தீப்பிற்கு மாதுளம் பழங்களை கொடுத்தார். தற்போது மகாராஷ்டிராவில் மாதுளை மற்றும் திராட்சை சீசன் ஆகும். சரத் பவார் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசி இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. இம்மசோதா நிறைவேற வேண்டுமானால் ஆளும் கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும்.
இம்மசோதா தாக்கல் செய்யப்படும்போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மட்டும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் பாராளுமன்ற கூட்டுக்குழுவின் விவாதத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. சமீபத்தில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயும் மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசினார். சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டன. ஆனால் தேர்தலில் இக்கூட்டணிக்கு படுதோல்வி கிட்டியது. ஆனால் மக்களவை தேர்தலில் இக்கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.