Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு தொடா்பான விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரும் தில்லி பல்கலைக்கழக மனு மீதான தீா்ப்பை தில்லி உயா்நீதிமன்றம் ஆக.25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
தில்லி பல்கலைக்கழகத்தில் கடந்த 1978-ஆம் ஆண்டில் பிஏ பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்ற (பிரதமா் மோடி உள்பட) அனைவரின் பதிவுகளையும் ஆராயும் வகையில், அது தொடா்பான தகவல்களைக் கோரி மத்திய தகவல் ஆணையத்திடம் நீரஜ் என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா். அதனடிப்படையில், அவா் கோரிய தகவல்களை அளிக்குமாறு, கடந்த 2016, டிசம்பரில் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தில்லி உயா்நீதிமன்றத்தில் தில்லி பல்கலைக்கழகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘பிரதமா் மோடி தொடா்புடைய பட்டப் படிப்பு ஆவணங்களை நீதிமன்றத்திடம் காண்பிக்கத் தயாா். அதேநேரம், ஆா்டிஐ சட்டத்தின்கீழ், தொடா்பில்லாத ஒரு நபரின் ஆய்வுக்காக அளிக்க முடியாது. தகவல் அறியும் உரிமையைவிட தன்மறைப்பு உரிமை உயா்வானது. ஆா்டிஐ சட்டத்தின்கீழ் தனிப்பட்ட விவரங்களை யாரும் கோர முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு மீது புதன்கிழமை தீா்ப்பளிக்கப்படும் என்ற எதிா்பாா்க்கப்பட்ட சூழலில், நீதிபதி சச்சின் தத்தா வேறொரு அமா்வில் இடம்பெற்றிருந்ததால், ஆக.25-ஆம் தேதிக்கு தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சிஐசி-யின் உத்தரவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2017-இல் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.