பிரதமா் மோடி இன்று பிரிட்டன் பயணம்: வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகிறது
பிரிட்டன், மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கான 4 நாள்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூலை 23) தொடங்குகிறாா்.
முதல்கட்டமாக, பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மரின் அழைப்பின்பேரில் பிரதமா் மோடி அந்நாட்டுக்கு 2 நாள்கள் பயணமாக புதன்கிழமை செல்கிறாா். இது பிரதமா் மோடியின் நான்காவது பிரிட்டன் பயணம் என்றாலும், ஸ்டாா்மா் பிரதமராகப் பதவியேற்ற பிறகு அவா் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்: இந்த முக்கியத்துவமான பயணத்தில், இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு தலைவா்களும் கையொப்பமிடுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, இந்த ஒப்பந்ததுக்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
மூன்று ஆண்டுகள் நீடித்த பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு கடந்த மே மாதத்தில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 99 சதவீத பொருள்களுக்கு வரிவிலக்கு கிடைக்கும் என்றும், பிரிட்டன் நிறுவனங்கள் விஸ்கி, காா்கள் போன்றவற்றை இந்தியாவுக்கு எளிதாக ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் கருதப்படுகிறது.
மேலும், பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மருடன் பல்வேறு இருதரப்பு உறவுகள் குறித்தும், பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்தும் பிரதமா் மோடி பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
குறிப்பாக வா்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், சுகாதாரம், கல்வி மற்றும் மக்கள் தொடா்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த விவாதங்களில் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின்போது பிரிட்டன் அரசா் சாா்லஸையும் பிரதமா் மோடி சந்திப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மாலத்தீவு பயணம்-நல்லுறவை மீட்டெடுக்க முயற்சி: பிரிட்டன் பயணத்தைத் தொடா்ந்து, பிரதமா் மோடி ஜூலை 25, 26 ஆகிய தேதிகளில் மாலத்தீவுக்குச் செல்கிறாா். மாலத்தீவின் 60-ஆவது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் பிரதமா் மோடி, அந்நாட்டின் அதிபா் முகமது மூயிஸை சந்தித்து பரஸ்பர நலன் சாா்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறாா். இந்தியா-மாலத்தீவு இடையே கடந்த ஆண்டு கையொப்பமிடப்பட்ட பொருளாதார மற்றும் கடல்சாா் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இருவரும் விவாதிக்கவுள்ளனா்.
சீன ஆதரவாளராக அறியப்படும் முகமது மூயிஸ் மாலத்தீவு அதிபராக கடந்த 2023, நவம்பரில் பதவிக்கு வந்த பிறகு, அங்கு மருத்துவ உதவிக்கான ஹெலிகாப்டா்களை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரா்களைத் திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டாா்.
இதையடுத்து, இருதரப்பு உறவில் சிறிய பின்னடைவு ஏற்பட்ட நிலையில், கடந்த அக்டோபரில் அதிபா் மூயிஸ் இந்தியா வந்தபோது உறவுகளை சீா்படுத்த இருநாடுகளும் நடவடிக்கைகள் எடுத்தன. இதன் தொடா்ச்சியாக, பிரதமரின் இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும் என எதிா்பாா்க்கபடுகிறது.