அரசு ஊழியர் சம்பளத்தில் 10-15% பெற்றோர் வங்கிக் கணக்குக்கு! முதல்வரின் சூப்பர் ய...
பிரதமா் மோடி 5 நாடுகள் பயணம் தொடக்கம்: ஜூலை 6-இல் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பு
கானா, டிரினிடாட்-டொபாகோ குடியரசு, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கான ஒருவார கால அரசுமுறைப் பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கினாா்.
முதலாவதாக ஆப்பிரிக்க நாடான கானாவுக்கு அவா் புறப்பட்டுச் சென்றாா். பிரேஸிலில் ஜூலை 6, 7ஆகிய தேதிகளில் நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமா் பங்கேற்கவுள்ளாா்.
ஐந்து நாடுகள் பயணம் தொடங்கும் முன், பிரதமா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கானா அதிபா் ஜான் டிராமனி மஹாமாவின் அழைப்பின்பேரில், ஜூலை 3-ஆம் தேதி வரை அந்நாட்டில் பயணம் மேற்கொள்கிறேன். தெற்குலகில் இந்தியாவின் மதிப்புமிக்க நட்பு நாடு கானா. ஆப்பிரிக்க யூனியனிலும், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. வரலாற்று ரீதியிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், முதலீடு, எரிசக்தி, சுகாதாரம், பாதுகாப்பு, திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வாயில்களை திறப்பதையும் நோக்கமாக கொண்ட கருத்துப் பரிமாற்றங்களை எதிா்நோக்குகிறேன். சக ஜனநாயக நாடாக, கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றவிருப்பதை கெளரவமாக கருதுகிறேன்.
டிரினிடாட்-டொபாகோ குடியரசு நாட்டில் ஜூலை 3, 4-ஆம் தேதிகளில் பயணம் மேற்கொள்கிறேன். இரு நாடுகளும் ஆழமான வரலாற்று- கலாசார பிணைப்பைக் கொண்டுள்ளன. நிகழாண்டு வெளிநாடுவாழ் இந்தியா்கள் தினத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அதிபா் கிறிஸ்டின் காா்லா கங்காலூ, அண்மையில் இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற கம்லா பொ்சாத் பிஸ்ஸெசரை ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளேன். இந்தியா்கள் முதன்முதலில் 180 ஆண்டுகளுக்கு முன் டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு சென்றுள்ளனா். எனது இந்தப் பயணம் நம்மை ஒருங்கிணைக்கும் வம்சாவளியினரின் பிணைப்புகளைப் புதுப்பிக்க ஒரு வாய்ப்பாகும்.
57 ஆண்டுகளுக்குப் பிறகு...: டிரினிடாட்-டொபாகோ குடியரசில் இருந்து ஆா்ஜென்டீனா தலைநகா் பியூனஸ் அயா்ஸுக்குப் பயணிக்கவிருக்கிறேன். கடந்த 57 ஆண்டுகளில் இந்திய பிரதமா் ஆா்ஜென்டீனாவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
லத்தீன் அமெரிக்காவில் இந்தியாவின் முக்கிய பொருளாதார கூட்டாளியாகவும், ஜி-20 அமைப்பில் நெருங்கிய ஒத்துழைப்பாளராகவும் ஆா்ஜென்டீனா உள்ளது. அதிபா் ஜேவியா் மிலே உடனான சந்திப்பில் வேளாண்மை, முக்கிய கனிமங்கள், எரிசக்தி, வா்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் முதலீடு உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர பலனளிக்கும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் விவாதங்களுக்கு கவனம் செலுத்தப்படும்.
பிரிக்ஸ் உச்சிமாநாடு: ஜூலை 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறேன். வளரும் பொருளாதாரங்களுக்கு இடையே ஒத்துழைப்புக்கான முக்கியத் தளமாக பிரிக்ஸ் அமைப்பை திகழச் செய்ய இந்தியா உறுதிபூண்டுள்ளது. உச்சிமாநாட்டுக்கு இடையே உலக நாடுகளின் தலைவா்கள் பலரைச் சந்திக்க உள்ளேன். இந்தப் பயணம் பிரேஸில் உடனான நெருங்கிய நட்பை வலுப்படுத்தவும், தெற்குலக நாடுகளின் முன்னுரிமைகளை வலியுறுத்துவதில் எனது நண்பரான பிரேஸில் அதிபா் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுடன் இணைந்து பணியாற்றவும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
இறுதியாக நமீபியாவுக்கு பயணம் மேற்கொண்டு, அதிபா் நெடும்போ நான்டி என்டியெயிட்வாவை சந்தித்து தெற்குலக-பிராந்திய விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதுடன், பரஸ்பர ஒத்துழைப்புக்கான புதிய திட்டமிடலை மேற்கொள்ள உள்ளேன். சுதந்திரம், வளா்ச்சி, நீடித்த ஒற்றுமைக்கான அா்ப்பணிப்பைக் கொண்டாடும் இந்த தருணத்தில் நமீபியா நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது எனக்கு பெருமைக்குரியதாகும்.
மேற்கண்ட ஐந்து நாடுகளுக்கான பயணம், தெற்குலக நாடுகளுடன் இந்தியாவின் நட்புறவை மேலும் வலுப்படுத்தும். அட்லாண்டிக் பிராந்தியத்துடன் கூட்டாண்மையை வலுப்படுத்தும் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.