செய்திகள் :

நாய்க்குட்டி கடித்து கபடி வீரர் உயிரிழந்த சோகம்; ரேபிஸ் பாதிப்பால் கடும் துயரம்..

post image

உத்தரப்பிரதேசத்தில் மாநில அளவில் கபடி வீரராக இருந்தவர் பிரிஜேஷ் சோலங்கி. இவர் அங்குள்ள புலந்த்ஷஹர் மாவட்டத்தில் இருக்கும் பரானா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சாக்கடையில் கிடந்த நாய்க்குட்டி ஒன்றை மீட்டார். அப்படி மீட்ட போது அந்த நாய்க்குட்டி சோலங்கியை கடித்துவிட்டது.

அந்த நாய்க்குட்டி கடித்ததை சோலங்கி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தடுப்பூசியும் போடாமல் அலட்சியமாக இருந்துவிட்டார். கடந்த 26-ம் தேதி சோலங்கி சக வீரர்களுடன் மைதானத்தில் கபடி விளையாடிக்கொண்டிருந்தபோது அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. உடனே அவரை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டனர்.

உடனே அலிகர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சோலங்கியை நாய் அல்லது குரங்கு கடித்திருக்கவேண்டும் என்று கூறி அவரை உடனே அலிகர் மருத்துவ கல்லூரி அல்லது டெல்லிக்கு கொண்டு செல்லும் படி தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கூறினர்.

இது குறித்து சோலங்கியின் சகோதரர் சந்தீப் கூறுகையில், ''சோலங்கியை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றோம். ஆனால் மருத்துவமனையில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டனர். அதோடு சிகிச்சையும் கொடுக்கவில்லை'' என்றார்.

அவரை வீட்டில் கொண்டு வந்து வைத்திருந்து சிகிச்சை கொடுத்து வந்தனர். அவருக்கு ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி தொற்று ஏற்பட்டு அவரது நிலைமை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வந்தது.

தனி அறையில் அவரை அடைத்திருந்தனர். அவர் படுக்கையில் இருந்து கொண்டு மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். அவரை கட்டுப்படுத்த மற்றவர்கள் முயன்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் இறந்து போனார்.

தெரு நாய்

சோலங்கி கபடி போட்டியில் தங்கப்பதக்கமும் பெற்று இருக்கிறார். இச்சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அக்கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு வெறிநாய்க்கடிக்கு தடுப்பூசி போட்டனர்.

இது குறித்து சோலங்கியின் பயிற்சியாளர் பிரவீன் இது குறித்து கூறுகையில்,'' சோலங்கி தனது உடம்பில் இருந்த காயத்தை விளையாட்டில் ஏற்படக்கூடிய ஒன்றுதான் என்றும், வலி விளையாட்டால் ஏற்படுகிறது என்று கவனக்குறைவாக இருந்துவிட்டார்''என்றார்.

வெறிநாய்க்கடி எனப்படும் ரேபிஸ் தொற்று ஏற்பட்டால் முதலில் காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்படும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ரேபிஸ் பொதுவாக இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை எந்த வித அறிகுறியையும் வெளிப்படுத்தாது. இது ஒரு வாரம் முதல் ஒரு வருடம் வரை இருக்கலாம். இது தொற்று ஏற்பட்ட இடம் மற்றும் வைரஸின் அளவு போன்றவற்றை பொறுத்து மாறுபடும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.